×
Saravana Stores

காஷ்மீரில் என்கவுன்டர் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 3 தீவிரவாதிகள் பலி: 4 பாதுகாப்பு படையினர் படுகாயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒரே நாளில் நேற்று நடந்த 2 என்கவுன்ட்டர்களில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முன்னணி தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 4 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவி வருகின்றனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவி வரும் தீவிரவாதிகள் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தி பிடிக்கின்றனர்.

இந்த நிலையில், அனந்தநாக்கில் நேற்றுமுன்தினம் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசண்டை நடந்தது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தலைநகர், ஸ்ரீநகரில் உள்ள கான்யார் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 தீவிரவாதிகள் மறைந்துள்ளதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் ஒரு தீவிரவாதி பலியானான். இந்த சம்பவத்தில் 2 சிஆர்பிஎப் வீரர்கள்,ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தனர். சுட்டுகொல்லப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் (எல்இடி) முன்னணி தளபதியான உஸ்மான் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். காஷ்மீரில் பல ஆண்டுகளாக இருந்து பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள உஸ்மான் சுட்டு கொல்லப்பட்டது எல்இடி அமைப்புக்கு மிக பெரிய பின்னடைவாகும் என்று போலீசார் கூறினர்.

* தீவிரவாதிகளை கொல்லக்கூடாது பரூக் அப்துல்லா சர்ச்சை
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா கூறுகையில்,‘‘ஜம்முகாஷ்மீரில் உள்ள அரசை சீர்குலைக்கும் முயற்சியாக தாக்குதல்கள் நடந்து வருகிறதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதை விசாரிக்க வேண்டும். தீவிரவாதிகள் பிடிபட்டால் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். எனவே தீவிரவாதிகளை சுட்டு கொல்லக்கூடாது’’ என்றார்.

The post காஷ்மீரில் என்கவுன்டர் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 3 தீவிரவாதிகள் பலி: 4 பாதுகாப்பு படையினர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Lashkar-e-Taiba ,Kashmir ,Srinagar ,Pakistan ,Jammu-Kashmir ,Lashkar ,e-Taiba ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் பேரவையில் அமளியில் ஈடுபட்ட...