×
Saravana Stores

வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது; சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்.! வாரிசு வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவுபெறுகிறது. அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. போட்டியிடும் வாரிசுகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. இங்கு பாஜ-காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. கூட்டணியை பொறுத்தவரை, பாஜ, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மகாயுதி கூட்டணியாக இருக்கின்றன. மறுபுறம், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மகாவிகாஸ் கூட்டணியாக களம் காண்கின்றன. மகாயுதிதான் தற்போதைய ஆளும் கட்சி என்றாலும் கூட, சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் மகாவிகாஸ் கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மகாவிகாஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நம்பிக்கையில் தற்போது சட்டமன்ற தேர்தலையும் இக்கூட்டணி எதிர்கொள்ள தயாராகி விட்டது. இங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போதுவரை மொத்தம் 99 இடங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நேற்று 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. ஆளும் மகாயுதி கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒர்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனான முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து மூத்த தலைவர் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிண்டே சிவசேனா இதுவரை மொத்தம் 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதேபோல சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 3வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் 9 தொகுதி வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அணுசக்தி நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் மகள் சனாவுக்கு எதிராக (அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்) நடிகை ஸ்வரா பாஸ்கர் கணவர் பகாத் அகமது களமிறக்கப்பட்டுள்ளார். மராத்தா, இதர பிற்படுத்தப்பட்டோர் இடையே இடஒதுக்கீடு விவகாரத்தில் பதற்றம் நிலவும் பீட் மாவட்டத்தில் பல தொகுதிகளில் மராத்தா ஜாதியினரை சரத்பவார் தேசியவாத கட்சி வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது, மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் களம் காணும் அரசியல் வாரிசுகள் பலரும் கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த தேர்தல் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

The post வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது; சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்.! வாரிசு வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Maharashtra Assembly elections ,Maharashtra Assembly ,Dinakaran ,
× RELATED அரசியலமைப்பு புத்தகம் வெற்று காகிதம்...