நெல்லை: தமிழக ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி நடப்பதால், மாணவ, மாணவிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்திறனாய்வு தேர்வுக்கு சில தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
அரசு ஆணைப்படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தமாக ரூ.10ஐ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று 12ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் விண்ணப்பிக்க இயலாது. இத்தகவலை அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
The post டிசம்பரில் நடக்கும் ஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.