உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள சுமார் 80 கிராமங்கள் உள்ளன. இந்த காவல் நிலையத்தில் சிவில், கிரிமினல், அடிதடி, பணம் கொடுக்கல் – வாங்கல், குடும்ப தகராறு என பல்வேறு பிரச்னைகளுக்கும் பாஸ்போர்டு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சான்றிதழ் பெறுவதற்காக இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் என நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகளை கண்காணித்து நடந்த நிகழ்வுகளையும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறியும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர்களின் உதவியோடு உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 50 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து காவல் நிலைய கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனால், குற்ற சம்பங்கள் பெருமளவு குறைந்தது மட்டுமின்றி விபத்துக்களும் நடக்கும் நிகழ்வுகளும் உடனுக்குடன் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நாளடைவில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டது. இதனால், பெரும்பாலான கேமராக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போனது. மேலும், உத்திரமேரூர் செங்கல்பட்டு மற்றும் வந்தவாசி சாலைகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி செய்யப்பட்டது. இதனால் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டன. சாலை விரிவாக்க பணிகள் முடிந்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும், தற்போது உள்ள கண்காணிப்பு கேமராக்களும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன. அவற்றினை பராமரிக்க யாரும் முன்வருவதில்லை. இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியில் மருத்துவான்பாடி கூட்ரோடு அருகே வெட்டபட்டநிலையில் ஆண் சடலம் மீட்டு 4 நாட்களுக்கு பிறகே கொலை என தெரிந்து மூவர் கைது செய்யப்பட்டனர். அதேப்போல், கடந்த மாதம் 27ம் தேதியன்று காட்டுப்பாக்கம் அருகே வெட்டப்பட்ட வாலிபர் சடலத்தை மீட்டு மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு கொலை என வழக்கை மாற்றி 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், செப்.12ம் தேதியன்று பங்களாமேடு பகுதியில் கோவிந்தம்மாள் என்ற மூதாட்டி வீட்டை உடைத்து நகை திருட்டு, கடந்த 2 தினங்களுக்கு முன் அரசாணிமங்கலம் கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் பூட்டை உடைத்து பணம் கவரிங் நகைகள் கொள்ளை என கடந்த சில மாதங்களாகவே உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களும், விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது.
அவைகளை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். இதற்கு காரணமாக கூறப்படுவது, சுமார் 60 காவலர்கள் பணியாற்ற வேண்டிய உத்திரமேரூர் காவல் நிலையத்தில் தற்போது 25 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும், சில காவலர்கள் இதரப்பணிக்காக வெளியே சென்றுவிடுகின்றனர். மீதியுள்ள காவலர்கள் மட்டுமே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த சமயங்களில் கண்காணிப்பு கேமராக்களும் இல்லாதது பேலீசாருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செயல்படாமல் உள்ள கேமராக்களை பராமரிக்கவும், மேலும் காணமல்போன கேமராக்களுக்கு பதிலாக வேறு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உத்திரமேரூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்: குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் appeared first on Dinakaran.