×

அரசு பள்ளியை சூறையாடிய விவகாரத்தை கண்டித்து ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: புதுப்பட்டினத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் அரசு பள்ளியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நேற்று ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்பாக்கம் நகரிய பகுதியான புதுப்பட்டினத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கல்பாக்கம், புதுப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடுக்கப்பட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் 26ம்தேதி திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

பீரோவில், பணம் ஏதும் கிடைக்காததால், விரக்தியடைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்களின் வருகை பதிவேடு, மாற்றுச்சான்றிதழ் பதிவேடு புத்தகம் மற்றும் மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை கிழித்தும், கணினியை உடைத்தும், வேதியியல் பிரிவு ஆய்வகத்தினை சேதப்படுத்தியும், மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா இதுகுறித்து கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கல்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று சிசிடிவி ஆதாரத்தை வைத்து, திருட வந்தவர்கள் குறித்து ஆதாரம் மற்றும் அடையாளத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, பள்ளி உபகரணங்களை சேதப்படுத்தியர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத கல்பாக்கம் போலீசாரை கண்டித்து, பள்ளி ஆசிரியர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து வந்த பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்தவர்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில், போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர். இச்சம்பவத்தால், பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு பள்ளியை சூறையாடிய விவகாரத்தை கண்டித்து ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: புதுப்பட்டினத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Thirukkazhukundram ,Kalpakkam ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அரசு பள்ளியில் கேமரா வருகை பதிவேடு, ஆய்வகம் சூறை