×

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு விமான போக்குவரத்து நிறுவனத்தில் பயிற்சி: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம், 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு (Air Cargo Introductort + DGR) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்புகள் (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 13 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஆறுமாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும் பயிற்சிக்கான செலவின தொகையான ரூ.95,000 தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Tansport Association-Canda மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

பின்னர், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.70,000 ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னணி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo, Air India, Menzies, Bird Aviaion, Hyundai, Go Tours,Wings Vacation, Zenith Tours, Alhind Tours மற்றும் Money Exchange போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு விமான போக்குவரத்து நிறுவனத்தில் பயிற்சி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidars ,Aviation Institute ,Kanchipuram ,TADCO ,International Aviation Institute ,District Collector ,Kalaichelvi Mohan.… ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் மற்றும்...