×
Saravana Stores

தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்படி வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை: கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்படி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து பொதுமக்கள் செல்லும்போது இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று போக்குவரத்து போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை கடைகளுக்கு முன்பு சாலையில் நிறுத்த அனுமதிக்கக் கூடாது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களில் இருந்து இறங்கியவுடன் வாகனங்களை அங்கிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத பகுதிக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தங்களது கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு கடைக்காரரும் தனியாக அதற்கென ஒரு ஊழியரை நியமித்துக்கொள்ள வேண்டும். பார்க்கிங் வசதி உள்ள வணிக நிறுவனங்கள் அவர்களது வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை பார்க்கிங் பகுதிக்கு கொண்டுசென்று நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.

பார்க்கிங் பகுதி இல்லையென்றால் தனியாக ஒரு பார்க்கிங் பகுதியை ஏற்படுத்தி அங்கே வாகனங்களை கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டும் இதுவரை யாரும் கடைபிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தமுறை அதுபோன்று அலட்சியமாக இல்லாமல் வியாபாரத்தில் எப்படி கவனம் செலுத்துகிறீர்களோ, அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம், வள்ளுவர் குருகுலம் சிக்னல் பகுதியில் இருந்து தாம்பரம் சானடோரியம், மெப்ஸ் சிக்னல் பகுதி வரை தொடர்ந்து போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து மீறி வருகின்றீர்கள். இவ்வளவு ஆலோசனைகள் வழங்கியும் கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த அனுமதித்தால் வாகனங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

The post தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்படி வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை: கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram, Crompate GST road ,GST ,Ballavaram ,Bengalathur ,Dinakaran ,
× RELATED கடும் நெருக்கடி தரும் புதிய மோட்டார்...