×
Saravana Stores

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டம் உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தீபாவளியை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12,606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட, இந்தாண்டு கூடுதலான பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 2021ம் ஆண்டு 9,929 பேருந்துகள் இயக்கப்பட்டது. 2022ம் ஆண்டு 10,757 பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்தாண்டு 10,546 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தாண்டு 11,176 என்ற அளவில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப, அந்தந்த பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 94450 14436 என்ற 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-2628 81611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். சொந்த ஊர்களுக்கு செல்லும் ெபாதுமக்களுக்கு ஏற்ப போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படையாக டெண்டர் அறிவிக்கப்படும். அரசு பேருந்துகளின் கட்டணத்திற்கே பயணம் செய்யலாம். இவ்வாறாக வாடகைக்கு அமர்த்தப்படும் பேருந்துகளில் அரசு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். இதில் எந்த விதமான தனியார்மயமாக்கல் முயற்சியும் இல்லை. தேவைக்கேற்ப பயன்படுத்தும் வாகனங்களுக்கு வாடகை கொடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, வரும் 24ம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

பொதுவாக, பண்டிகையின் போது கூடுதலாக பயணம் மேற்கொள்வார்கள். அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்தாண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தீபாவளி அன்று முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த வருடம் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின்றி நேரடியாக களத்திற்கு வருவோர் கூடுதலாக உள்ளனர். மற்ற மாநிலங்களை விட கூடுதலான பேருந்து குறைந்த கட்டணத்தில் இயக்கிக்கொண்டு உள்ளோம். எனவே கூடுதலாக பேருந்துகள் குறிப்பிட்ட நாட்களுக்காக வாங்க முடியாது என்பதால் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளது. மேலும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வேளையில் 10 கி.மீக்கு ஒரு ஜீப் வாகனம் ரோந்து பணியில் ஈடுப்பட உள்ளது. எங்கெல்லாம் பிரச்னை ஏற்படுகிறதோ அங்கு காவல்துறை கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govt ,Chennai ,Diwali ,Transport Minister ,Sivashankar ,Diwali festival ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...