திருவள்ளூர், அக். 19: திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த தாழ்வு மண்டலம் உருவாகி இரண்டு நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநில நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மழை ஓய்ந்த நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் து.சிற்றரசு மேற்பார்வையில், திருவள்ளூர் உதவி போட்ட பொறியாளர் எஸ்.ஜே.தக்ஷனவிஸ் பெர்னான்டோ தலைமையில் உதவி பொறியாளர்கள் பிரவீன், பிரசாந்த் மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் செப்பனிடும் பணிகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக திருவள்ளூர் முதல் பூந்தமல்லி வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை கனமழையால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக மாறி சேதமடைந்துள்ளது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதேபோல் பழைய திருப்பாச்சூர் பகுதியில் இருந்து கொண்டஞ்சேரி வரை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்த சாலைகளையும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அரண்வாயில் குப்பத்திலிருந்து பாப்பரம்பாக்கம் வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய நெடுஞ்சாலைத் துறை சாலைகளை நெடுஞ்சாலைத் துறை தொழிலாளர்கள் செப்பனிட்டு சீரமைத்தனர். பேரம்பாக்கம் சாலை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே சேதமடைந்திருந்ததால் அதனையும் நெடுஞ்சாலை துறை தொழிலாளர்கள் சீரமைத்தனர். மேலும், மீஞ்சூர் முதல் வல்லூர், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி வரை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள சின்ன சின்ன பழுதடைந்த பகுதிகளை கண்டெடுத்து குளிர் தார் கலவை மூலம் சரிசெய்யும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு 2 நாட்களாக பெய்த மழை ஓய்ந்த பிறகு அடுத்த நாளே நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post மாவட்டம் முழுவதும் கனமழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.