சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 2 லட்சம் லிட்டா் அதிகம் என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மக்கள் அதிகளவில் பால் வாங்கியுள்ளனர். வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மழை அறிவிப்பு வெளியான போதே பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும், தேவைக்கு ஏற்ப பால் பவுடர்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்பட வில்லை என்று ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று முன்தினம் கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே அதிகபட்ச விற்பனையாக பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 2 லட்சம் லிட்டா் அதிகம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
The post சென்னையில் நேற்று ஒரே நாளில் 16.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை: ஆவின் நிர்வாகம் தகவல்! appeared first on Dinakaran.