×
Saravana Stores

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு முறையீடு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தை சேர்ந்த எல்லன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை.
எனவே, தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளது. இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். இதையடுத்து, புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

The post சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்யக்கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு முறையீடு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Samsung India workers' union ,ICourt ,Sriperumbudur ,Madras High Court ,Samsung India Labor Union ,Samsung ,CITU union ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...