×

பல்வேறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தி வந்த ஆடிட்டர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் லேக்வியூ அவென்யூ பகுதியில் வசித்து வந்தவர் குமரகுரு. (33), ஆடிட்டர். இவர் காக்களூரில் ஏ.கே.டெக்ஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை செலுத்திக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜிஎஸ்டி கணக்கு சம்மந்தமாக கடம்பத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், ஆடிட்டர் குமரகுரு தன்னுடன் சேர்த்து 430 பேரிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து புதன்கிழமை ஆடிட்டர் குமரகுரு, திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞர்களுடன் வந்தார்.

அப்போது நிருபர்களிடம் ஆடிட்டர் குமரகுரு கூறுகையில், ‘பிரேம்குமார் தன்னிடம் என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்றும் மேலும் ரூ.10 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்,’ என கூறியுள்ளார். கொலை மிரட்டல் விடுத்த பிரேம்குமார், ரவுடி என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீண்டும் எஸ்பி அலுவலகத்திற்கு ஆடிட்டரால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி பிரேம்குமார் எஸ்பி அலுவலகத்தில் மற்றொரு புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை ஆடிட்டர் குமரகுரு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தவர் காலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் அவரது வீட்டில் தாயார் புகைப்படத்துக்கு அருகில் ஆடிட்டர் குமரகுரு எழுதிய கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.2.50 லட்சம் ரொக்கமும், லேப்டாப்பும் இருந்துள்ளது. இதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விவாகரத்தான ஆடிட்டர் குமரகுருவின் மனைவி மஞ்சு, தகவல் அறிந்து வீட்டிற்கு வந்தவர் ஆடிட்டரின் உடலைக் கண்டு கதறி அழுதார்.

ஆடிட்டர் குமரகுரு மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரும் பரஸ்பரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நேற்று போலீசார் இருவரையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆடிட்டர் குமரகுரு தூக்கில் தொங்கியது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகார் கொடுத்த குற்றச்சாட்டில் தானே சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் தூக்கில் தொங்கினாரா அல்லது பிரேம்குமார் எஸ்பி அலுவலக வாசலிலேயே வைத்து கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற இருவேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடிட்டர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பல்வேறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தி வந்த ஆடிட்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kumaraguru ,Lakeview Avenue ,Kakkalur ,Thiruvallur ,AKTex Solution Private Limited ,Kakalore ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில்...