×

மகனால் இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஐ.டி ஊழியர்!

நன்றி குங்குமம் தோழி

வெளிநாட்டு வாசம், கை நிறைய சம்பளம், நிறைவான வாழ்க்கை… ஆனால் இதெல்லாம் வேண்டாம் என்று உதறிவிட்டு தாங்கள் பிறந்த ஊரான அருப்புக்கோட்டையில் நிலம் ஒன்றை வாங்கி அதில் தன் கணவருடன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கோமதியம்மாள். இதில் விளைவிக்கும் அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பழங்களை அப்படியே விற்பனை செய்வது மட்டுமில்லாமல் மதிப்புக்கூட்டும் பொருளாகவும் மாற்றி ‘வனம்’ என்ற பெயரில் விற்பனை செய்கிறார். வெளிநாட்டு வேலையை வேண்டாம் என்று உதறிய இவர்களைப் பார்த்து கிண்டல் செய்தவர்கள் தற்போது இவர்களின் விவசாய திறனைப் பார்த்து வியந்தது மட்டுமில்லாமல் அவர்களின் விவசாய முறைகளை பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள். ‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அருப்புக்கோட்டை. அங்குள்ள கலைக்கல்லூரியில்தான் இளங்கலைப் பட்டப்படிப்பு முடிச்சேன். அதன் பிறகு திருமணமானது. என் கணவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை என்பதால், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுக் கொண்டு ஆறு வருட காலம் அங்கு வசித்து வந்தோம். அங்கு நான் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை அங்கு வளர்க்க பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு நம்முடைய மண்ணிற்கு வரவேண்டும் என்று தான் என் மனம் துடித்துக் கொண்டு இருந்தது. நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம் இருந்தும் எனக்கும் என் கணவருக்கும் இந்தியாவில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதனால் கூடுமானவரை சம்பாதித்ததை சேமித்து வைத்தோம். அதைக் கொண்டு இங்கு ஒரு விவசாய நிலம் ஒன்றை வாங்கினோம். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு குட்பை சொல்லிவிட்டு நாங்க இந்தியாவிற்கு வந்துட்டோம். பலர் எங்களை பார்த்து கேட்ட முதல் கேள்வி அந்த வாழ்க்கையை விட்டு விட்டு இங்கு வரக் காரணம் என்ன என்பதுதான். அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மக்கள் சுகாதாரமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை. இங்கு நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். ஆனால் அதற்கான மருத்துவமனைகளும், மருந்தகங்களும் குறைவு. அங்குள்ள மக்கள் தொகையை விட மருத்துவமனைகளும், மருந்தகங்களும் அதிகம். வருடா வருடம் மக்கள் தொகை குறைந்து வருகிறது. மூன்றில் இருவருக்குதான் குழந்தை பெறும் தன்மை அங்கு நிலவ ஆரம்பித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகளால் கேன்சர் நோயாளிகள் அதிகமாக உள்ளனர். எங்களுடைய அடுத்த தலைமுறை அங்கு முடிவடைந்திடக்கூடாது என்பதில் நானும் என் கணவரும் மிகவும் உறுதியாக இருந்தோம். அதனால் என் சொந்த நாடான இந்தியாவிற்கே திரும்பி வந்துட்டோம்’’ என்றவர் இயற்கை விவசாயத்தின் மேல் ஈடுபாடு ஏற்பட்ட காரணம் குறித்து விவரித்தார்.‘‘பத்து வருடங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்கள் குறித்து தெரியாது. எங்களுக்கு ஆரோக்கியமான உணவு என்றால் கம்பு, கேழ்வரகுதான்.

என் மகனுக்கு ஒன்றரை வயசு இருக்கும். அவனுக்கு இடுப்பிலிருந்து கீழ்ப்பகுதி சிறுத்துக் கொண்டே வந்தது. கால்களை நேராக வைத்து நடக்க முடியவில்லை. டாக்டரிடம் காண்பித்த போது ஊட்டச்சத்து குறைபாடு என்று சொன்னார். அலோபதியில் அதற்கான மருந்து இல்லை என்றார்கள். அந்த சமயத்தில்தான் 90 வயது நிறைந்த இயற்கை மருத்துவரின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது. அவரிடம் என் மகனை அழைத்து சென்றோம். அவர்தான் எங்களுக்கு சிறுதானிய உணவுமுறைகளின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யலாம் என்று கூறினார். நாங்களும் அவர் கூறியதை அப்படியே பின்பற்ற ஆரம்பித்தோம். என் குழந்தைகளுக்கு மட்டுமில்லை நாங்களும் அந்த உணவுகளை சாப்பிட துவங்கினோம். 60 நாட்கள் சிறுதானியம், பயறு வகைகள், பழரசம், உலர்ந்த பழங்கள், முந்திரி, பாதாம், ஆவியில் வேகவைத்த மசாலா, எண்ணெய் சேர்க்காத காய்கறிகளை மட்டுமே அவனுக்கு கொடுத்தோம். அரிசி உணவுகளை கொடுக்கவில்லை. மண் குளியல், வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் ஒத்தடம், சுண்ணாம்பு மற்றும் சர்க்கரை கலந்து மூட்டுபகுதி மற்றும் இடுப்பு எலும்பு பகுதிகளில் தேய்த்து, நன்கு காய்ந்தவுடன் வெந்நீரில் குளிக்க வைத்தோம். அதில் நல்ல மாற்றம் தெரிந்தது. இப்ெபாழுது முழுமையாக குணமடைந்து நன்றாக இருக்கிறான். சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசிகளின் பயன்களை நேரடியாக அனுபவித்த பிறகுதான் அதன் மகத்துவத்தை நாங்க அறிந்து கொண்டோம். இவை அனைத்தும் இயற்கை முறையில் விளைந்தவை.

நம் முன்னோர்கள் இதை உண்டுதான் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருந்தார்கள். அதனால் நாங்களும் அந்த உணவு முறைக்கு மாற துவங்கியது மட்டுமில்லாமல், இதை மக்களுக்கும் கொடுக்க திட்டமிட்டோம். அதனால் எங்களின் நிலத்தில் நாங்க இயற்கை விவசாய முறையில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளை விளைவிக்க துவங்கினோம். ஆனால் அதனை சந்தைப்படுத்தும் போது, அந்தப் பொருளை உற்பத்தி செய்ததற்கான வருமானத்தை எங்களால் பார்க்க முடியவில்லை. அதனால் நாங்களே அதனை சந்தையில் கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்தோம். விவசாயம் முழுக்க முழுக்க நான் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். என் கணவர் பொருட்களை சந்தைப்படுத்தும் வேலையில் கவனம் செலுத்தினார். நேரம் கிடைக்கும் போது என் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து தோட்ட வேலையில் ஈடுபடுவார்கள். முதலில் எங்களை சுற்றி உள்ளவர்கள் ஆர்வக்கோளாறில் நாங்க ஏதோ செய்கிறோம் என்று கேலி செய்தார்கள். எங்க நிலத்தில் வேலைக்கு வருபவர்களும் நாங்க சொல்வதை கேட்காமல், இப்படி விவசாயம் செய்தால் விளைச்சல் இருக்காது என்று தான் சொன்னார்கள். ஆனால் நாங்க உறுதியாக எங்க முறைப்படிதான் நாங்க விவசாயம் செய்வோம். நாங்க சொல்வதை செய்தால் போதும் என்பதில் உறுதியாக இருந்தோம். முதலில் தென்னை நடுவே வாழை மற்றும் பயிர்களை நடவு செய்தோம். அது நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அதைப் பார்த்து பக்கத்து விவசாய நிலத்தில் இருந்தவர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.

அவர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்க, நாங்களும் அது குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தோம். இதன் மூலம் அவர்களும் பயனடைந்தார்கள். நெல் வயல்களில் இயற்கை உரங்களை தெளித்து பயிர் செய்தோம். அவை அனைத்தும் பசுமையாக விளைந்தது. இது போல் எங்களின் நிலத்தில் நாங்க உணவுச் சங்கிலியை ெதாடர்ந்து வந்தோம். ஐந்தடுக்கு முறையில் நாங்க விவசாயம் செய்த போது ஆரம்பத்தில் சில தவறுகளை செய்தோம். அதே போல் சமவெளியில் மிளகு பயிர் செய்தது சரியான விளைச்சலை கொடுக்கவில்லை. அதனால் சில நஷ்டங்கள் ஏற்பட்டது. ஆனால் அதையே பாடமாக எடுத்துக் கொண்டு நாங்க அதை மாற்றி அமைத்தோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி பல கோடி நுண்ணுயிரிகளுக்கும், பல்லாயிரக் கணக்கான உயிரினங்களுக்கும் நாங்கள் உணவளித்து நாங்களும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்கிறோம். மக்களுக்கும் ஆரோக்கியமான சுகாதாரமான உணவை அளிக்கிறோம்’’ என்றவர் அவர்களின் பொருட்கள் குறித்து விவரித்தார். ‘‘எங்க நிலத்தில் முள் சீத்தா, தேங்காய், மாங்காய், சிறுதானியங்கள், அரிசி வகைகள் எல்லாம் விளைவிக்கிறோம். எங்களின் பொருட்களை எங்களிடம் மட்டுமில்லாமல் டிபார்ட்மென்டல் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். நாங்க சீசனுக்கு ஏற்பதான் அரிசி மற்றும் சிறுதானியங்களை விளைவிப்பதால், நாங்க விளைவிக்காத நேரத்தில் மற்ற இயற்கை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். கருப்பு கவுனி அரிசி, கருங்குறுவை அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, குள்ளகார் போன்ற பாரம்பரிய அரிசிகளை நாங்க தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்தும் பெற்றுக் கொள்கிறோம்.

சிறுதானியங்களான வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு ஆகியவற்றை தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெற்றுக் கொள்கிறோம். இதற்கான உரங்களை நாங்களே இயற்கை முறையில் தயாரிக்கிறோம். அரிசிகளை அரிசிகளாக மட்டுமில்லாமல் அதனை அவல் மற்றும் புட்டு மாவாகவும் கொடுக்கிறோம். எங்க தென்ைனத் தோப்பில் இருந்து மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தயாரித்து அதனையும் விற்பனை செய்கிறோம். முள் சீதாவிற்கு கேன்சரை குணப்படுத்தும் தன்மை உள்ளதால் பழங்களாக விற்பனை செய்கிறோம். பழங்கள் வீணாகாமல் இருக்க அதனை காயவைத்து பொடியாகவும் தருகிறோம். முள் சீதா இலைகளும் விற்பனைக்கு கொடுக்கிறோம். மேலும் நிலத்திற்கு நாங்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை. தென்னை மட்டைகளை மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் வெட்டிப் போட்டு விடுவோம். களைக்கொல்லிகள் பயன்படுத்தாத காரணத்தினால் மற்ற களைகள், செடிகள் அனைத்தையும் அதற்கான இயந்திரங்களை வைத்து உழுது மண்ணிலே மக்க செய்து விடுவோம். எந்தவிதமான கழிவுகளையும் வெளியேற்ற மாட்டோம். அனைத்தையும் மரம், செடிகளுக்கு உரமாகவே உபயோகிக்கிறோம்.எங்களது விவசாய பொருட்களை சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோட்டில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைத்துள்ளோம். விவசாயம் என்பது சேவை என்பதை தாண்டி, விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தவும், விற்பனை செய்து பயன்பெறவும் மக்களும், அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தால் விவசாயிகளும் பயன் பெறலாம். தரமான பொருட்களை விளைவிப்பதால் அதன் மூலம் மக்களும் பயன் பெறலாம்’’ என்றார் கோமதியம்மாள்.

தொகுப்பு: திலகவதி

The post மகனால் இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஐ.டி ஊழியர்! appeared first on Dinakaran.

Tags : Kungumum ,Aruppukkottai ,
× RELATED பாலின பேதங்கள் ஒரு பார்வை பாலின பேதங்களின் தாக்கங்கள்