×

தங்கம் வென்ற சதுரங்க ராணிகள்!

நன்றி குங்குமம் தோழி

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். ஐரோப்பாவின் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் 2024ம் ஆண்டுக்கான 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெற்றது. இம்முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சுமார் 190 நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது. இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று இந்தியாவிற்கு இரட்டிப்பான வெற்றியை உறுதி செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். அதுவும் ஒரே சமயத்தில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்ததே இவ்வெற்றியின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் ஹரிகா த்ரோணவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் போன்ற 5 செஸ் விளையாட்டு வீராங்கனைகள் இருந்தனர். இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் அனைவரும் அவரவர்களுக்கான களத்தில் மிகச் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை தழுவியிருக்கின்றனர்.

இந்திய மகளிர் அணியை பொறுத்தவரையில் செஸ் ஒலிம்பியாட்டில் நடந்த மொத்தம் 11 போட்டி சுற்றுகளில் 9 வெற்றிகளையும் 1 தோல்வியையும் 1 டிராவினையும் சந்தித்துள்ளது. இந்த செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா த்ரோணவல்லி ஆகியோர் அசத்தலாக விளையாடி இந்தியாவிற்கான வெற்றியை உறுதி செய்தனர். இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்றில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்து மொத்தம் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022ல் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணிக்காக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட 5 வீர மங்கைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் செஸ் வீராங்கனையான வைஷாலி கிராண்ட்மாஸ்டர் என பட்டம் பெற்றவர். இப்பட்டம் பெற்ற இளம் வீராங்கனையான வைஷாலி தொடர்ந்து செஸ் விளையாட்டுகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரின் செஸ் பயணத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் செஸ் பயிற்சி எடுப்பதற்கும் பயணச் செலவுகளுக்குமே நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறார். அதன்பின்னர் இவரின் அசத்தலான விளையாட்டுத் திறமையை கண்டு பல ஸ்பான்சர்களும் இவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.

எளிமையான தோற்றத்தில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவரின் தாய் நாகலட்சுமி இவருக்கு பெரும் பலமாக இருந்து வருகிறார். வைஷாலி மட்டுமில்லாது அவரது சகோதரன் பிரக்ஞானந்தாவும் செஸ் உலகில் சாதனை படைத்து வருகிறார். செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர் அணி சார்பாக பிரக்ஞானந்தாவும் விளையாடியிருந்த நிலையில் இந்திய ஆடவர் அணியும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. தன் இரு பிள்ளைகளின் மகத்தான வெற்றி தாய் நாகலட்சுமியின் முகத்தில் பிரதிபலிக்கிறது. வைஷாலியும் சகோதரர் பிரக்ஞானந்தாவும் செஸ் விளையாட்டின் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள். செஸ் விளையாட்டில் அசத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் இளம் உடன்பிறந்தவர்கள் இவர்கள்தான். செஸ் விளையாட்டு வீரர்களுக்கான ரோல் மாடலாக திகழும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் தான் தனது ரோல் மாடல் எனவும், தனது சகோதரன் பிரக்ஞானந்தாவும் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் எனவும் வைஷாலி தனது பேட்டிகளில் கூறியிருக்கிறார். திவ்யா தேஷ்முக் மஹாராஷ்டிராவை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை. இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை இளம் வயதிலே பெற்றவர். தற்போது 18 வயதாகும் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பின் வெற்றியாளராகவும் திகழ்கிறார். உலக இந்திய ஜூனியர் பட்டத்தை பெற்ற இந்தியாவின் நான்காவது பெண் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார். தற்போது நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில் 11க்கு 9.5 என்ற மதிப்பெண்களுடன் தனிநபர் போர்டில் தங்கம் வென்றிருந்தார்.

புதுடெல்லியை சேர்ந்த வந்திகா அகர்வால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டுமல்லாமல் சர்வதேச மாஸ்டர் என்ற பட்டத்தினையும் பெற்றவர். இதுவரை நடந்த பல செஸ் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். 45வது செஸ் ஒலிம்பியாட்டில் 4வது போர்டில் விளையாடிய இவர் தனிநபருக்கான தங்கத்தையும் வென்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிகா த்ரோணவல்லி, இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனை ஆவார். இந்தப் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்திய பெண் என்ற சிறப்பினை பெற்றவர். தனது 5 வயதில் செஸ் பயிற்சியினை தொடங்கிய ஹரிகா பல தேசிய சாம்பியன்ஷிப்களை பெற்றவர். இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற வீராங்கனைகளில் இவரும் ஒருவராவார். இவரின் விளையாடும் பாணி அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். இந்திய செஸ் வீராங்கனைகளில் இவர் 9வது இடத்தில் இருக்கிறார். ஹரிகா விளையாட்டின் போது தீவிரமான கவனத்துடன் விளையாடக்கூடியவர். 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை என்ற போதிலும் அதற்கு முந்தின சுற்றுகளில் தனது சிறப்பினை கொடுத்திருந்தார்.டெல்லியை சேர்ந்த தானியா சச்தேவ் சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்ற வீராங்கனை ஆவார். இவர் எட்டு வயதிலேயே சர்வதேச அளவில் பட்டம் பெற்றவர். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினை பெற்ற எட்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆரம்ப சுற்றுகளில் இந்தியாவிற்கான முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post தங்கம் வென்ற சதுரங்க ராணிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi Chess Olympiad ,International Chess Federation ,45th Chess Olympiad for ,Budapest ,Europe, Hungary ,Dinakaran ,
× RELATED செஸ் தினத்தில் ஆனந்தின் அன்பளிப்பு!