×
Saravana Stores

நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ரயில்வேயில் பணி வழங்க நிலம் பெற்றதாக லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கில் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் உள்ளிட்ட 9 பேருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

சமீபத்தில், அமலாக்கத்துறை லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது , டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அவர்களை கைது செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்தார்.

The post நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi Special Court ,Lalu Prasad Yadav ,Tejashwi Yadav ,Delhi ,Delhi Rose Avenue Court ,Lalu Prasad ,Tej Pratap ,Former ,Bihar ,Chief Minister ,
× RELATED வெற்றியோடு திகழ வேண்டும் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து