×

நீலகிரியில் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிப்பு

 

ஊட்டி, அக். 7: ஊட்டி, குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக சுற்றுலா மற்றும் தேயிலை விளங்கி வருகிறது. சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற மலைகாய்கறிகள் அதிகளவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஜூலையில் துவங்கி ஒரு மாத காலம் கனமழை கொட்டியது. அந்த சமயத்தில் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்தது. அதன்பின் சுமார் இரு மாதங்கள் மழை பொழிவு இல்லை. இந்நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக ஊட்டி, குன்னூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, மீண்டும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் விவசாயிகள் உரமிட்டு பராமரித்து வந்த நிலையில், தற்போது மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் பல ஆயிரம் கிலோ பசுந்தேயிலை வருகிறது. தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை மட்டுமே வாங்கப்படுகிறது.

இந்நிலையில், தேயிலை மகசூல் அதிகரித்துள்ள சூழலில் அவற்றை பறிக்க போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் பசுமையான இலைகள் தேயிலை செடிகளிலேயே வீணாக கூடிய சூழல் உள்ளது. இதனால் மகசூல் அதிகரித்தும், இலை பறிக்க முடியாமல் உள்ளது.

The post நீலகிரியில் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,Coonoor ,Nilgiri ,Dinakaran ,
× RELATED ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில்...