×

மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையம் வந்த பெண் ஊராட்சி தலைவர் ஒடுகத்தூரில் பரபரப்பு அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி

ஒடுகத்தூர், அக்.5: அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி, ஒடுகத்தூரில் பெண் ஊராட்சி தலைவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி அருகே உள்ள கால்வாயில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் ₹5.40 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று பார்வையிட வந்தனர். அப்போது, முன்விேராதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நவகிருஷ்ணன்(55) அங்கு வந்து தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாவிடம் (33) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா போலீசில் புகார் அளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சாலையில் நின்றவாறு தன்னை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும், அவரை கைது செய்யாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறி வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொண்டு வந்தார். இதை பார்த்த வேப்பங்குப்பம் போலீசார், சுகன்யாவை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி சமாதானப்படுத்தினர். இதற்கிடையில், தகவலறிந்த பொதுமக்கள் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு சென்றார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையம் வந்த பெண் ஊராட்சி தலைவர் ஒடுகத்தூரில் பரபரப்பு அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Odugathur ,Vellore District ,Vepanguppam ,
× RELATED வேன் டிரைவர் அடித்துக்கொலை...