×
Saravana Stores

நீரிழிவு நோயாளிகளுக்கு எமனாகும் புகைப்பழக்கம்; ரத்த நாளங்களை சிதைக்கும் போதை பொருட்கள் பயன்பாடு : புற்றுநோயால் ஆண்டுக்கு 2.5 லட்சம் உயிரிழப்பு

‘டன் கணக்கில் போதை புகையிலை பொருட்கள் பறிமுதல்’ என்பது போன்ற தகவல்கள் நித்தமும் நம்மிடையே சுற்றிச்சுழன்று வருகிறது. அதேநேரத்தில் பான்பராக், குட்கா, பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுதோறும் 6லட்சம் பேர் இறந்து போகின்றனர். அதில் 2.5லட்சம் பேர், புகையிலை பொருட்களால் ஏற்படக்கூடிய புற்று நோயினால் இறந்து போகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது. அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் மனநிலையோடு யோசித்து பார்த்தால் சமூகத்தில் புகையிலை பொருட்களின் தாக்கம் எந்த அளவிற்கு வீரியம் பெற்றிருக்கிறது என்பது தெரியும்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி புற்றுநோய், நுரையீரல் நோய், இதயநோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பெரும் நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பொருட்கள். உலகளவில் சராசரியாக 39சதவீதம் ஆண்களும், 9சதவீதம் பெண்களும் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்களின் பாதிப்பால் ஏற்படும் நோய்களால் 10லட்சத்து 35ஆயிரம் இறப்புகள் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றநோய்களின் பாதிப்பு நமக்கு ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் தெரிந்து நாம் உஷாராகி விடுவோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய கொரோனா நோய்க்கு கூட அறிகுறிகளை நாம் எளிதில் கண்டறிந்தோம். ஆனால் புகையிலை பொருட்களால் ஏற்படும் நோய்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது.

பலஆண்டுகளாக புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு கூட நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது. இதனால் புகையிலை பொருட்கள் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதே உண்மை. ஆனால் அறிகுறியே தெரியாமல் திடீரென பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை பொருட்கள் பயன்பாடு, ரத்தநாளங்களையே சிதைத்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். இது குறித்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நவீனமான இன்றைய வாழ்க்கை முறையில் உடல் செயல்பாடுகள் குறைந்து, அனைத்தும் இயந்திரமாகி விட்டது. இதனால் உடல் பருமன், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் சூழல் உள்ளது. அதேநேரத்தில் புகையிலை பொருட்களின் மீதான நாட்டமும் இளைஞர்கள், நடுத்தர வயதினரிடம் அதிகளவில் உள்ளது.

இந்த புகையிலை பொருட்கள் என்பது புற்றுநோய் மட்டுமல்லாது இதயம், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் வழிவகுக்கிறது. மனித உடலில் கை, கால்கள், இதயம், கழுத்து, மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் அதிக அளவில் ரத்த நாளங்கள் உள்ளது. இவற்றில் கொழுப்புகள் படிதல், புகையிலை போன்ற போதைப்பொருட்கள் பயன்பாடு, துரித உணவுகள், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் நிறைந்த உணவுகள், சீரற்ற உணவு பழக்க வழங்கங்கள், உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாத போது ரத்தநாளங்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு, உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால் அவருக்கு கை, கால்களில் செல்லும் ரத்தநாளங்களில் ரத்தஓட்டம் தடைபடும். இதனால் கை, கால்களில் உள்ள செல்கள் அழிந்து விடும். இதுவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உறுப்புகளை அகற்ற வழிவகுத்து விடுகிறது. தற்போது இளைய தலைமுறையிடம் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் இருந்து அவர்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். மேலும் அவர்களை கொண்ேட புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் மட்டுமல்ல, அனைவருமே புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் ஏற்படும் அபாயங்கள் தடுக்கப்படும். இவ்வாறு மருத்துவநிபுணர்கள் கூறினர்.

பழக்கம் இல்லாவிட்டாலும் தாக்கும் ‘பாசிவ் ஸ்மோக்கிங்’
குட்கா, பான்பராக் என்று புகையிலை பொருட்கள் பெருமளவில் இருந்தாலும் இதில் பிரதானமாக இருப்பது சிகரெட். இந்த சிகரெட் பிடிக்கும் புகைப்பழக்கம் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் நிறைந்திருக்கிறது. புகை உயிருக்கு பகை என்ற வாசகத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த புகைப்பழக்கம் என்பது அதை பயன்படுத்துவோரை விட, அருகில் இருப்போரை அதிகளவில் பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ‘பாசிவ் ஸ்மோக்கிங்’ என்ற இந்த பழக்கத்தால் சிகரெட் புகைக்காதவர்கள் பெருமளவில் பாதித்து வருகின்றனர். பாசிவ் ஸ்ேமாக்கிங் என்றால் ஒருவர் வீட்டிலோ அல்லது பொதுஇடங்களிலோ புகை பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது அவரை சுற்றியிருக்கும் நபர்கள், அந்தப்புகையினால் பாதிப்பதே ‘பாசிவ் ஸ்மோக்கிங்’ எனப்படுகிறது.

The post நீரிழிவு நோயாளிகளுக்கு எமனாகும் புகைப்பழக்கம்; ரத்த நாளங்களை சிதைக்கும் போதை பொருட்கள் பயன்பாடு : புற்றுநோயால் ஆண்டுக்கு 2.5 லட்சம் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது :சிவன்