×

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது

ஆலந்தூர்: காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிபன் கடைக்காரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிமலை மாங்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த 22ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர், பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி நள்ளிரவில் மாயமான இளம்பெண், பரங்கிமலை பேருந்து நிறுத்தத்தில் அழுதபடி நின்று கொண்டிருப்பதாக, அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற அவர்கள், மகளை மீட்டு, வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது பட்ரோட்டில் உள்ள டிபன் கடையில் வேலை பார்க்கும் டோனாலி (30) என்பவர், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, என்னை அழைத்துச் சென்று கோயம்பேட்டில் ஒரு அறையில் தங்க வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர், கும்பகோணம் அழைத்து சென்றார். அங்கு, அவரது நண்பர்கள் சிலரும் என்னை பலாத்காரம் செய்தனர். பின்னர், டோனாலி என்னை சென்னை அழைத்து வந்து, பரங்கிமலை பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்துவிட்டு, மாயமாகிவிட்டார், என கதறி அழுதுள்ளார்.

இதுபற்றி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து, செல்போன் சிக்னலை வைத்து, கும்பகோணத்தில் பதுங்கி இருந்த டோனாலியை (30) நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், நெசப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (24), விழுப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (45), சரண் (31), கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (26), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், 5 பேர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Alandur ,Parangimalai Mangaliayamman Koil Street ,
× RELATED திராவிட மாடல் என்றால்...