×

நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார்

அஞ்சுகிராமம்: குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து வீசுவதற்கு சென்ற கணவரை தெருநாய்கள் சுற்றிவளைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மணகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரிய சத்யா (30). தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 2 பிள்ளைகள் உள்ளனர். மரிய சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை மாரிமுத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தம்பதியிடையே தகராறு காரணமாக குழந்தைகள் இருவரையும் பாளையங்கோட்டையில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். தகராறு காரணமாக மரிய சத்யா வேலையை விட்டு நின்றார். அதன் பின்னரும் தகராறு ஓயவில்லை. இந்தநிலையில் உறவினர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் கடந்த 40 நாட்களுக்கு முன், கணவன், மனைவி 2 பேரும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வந்து, பால்குளம் அருகே தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினர். மாரிமுத்து டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். இங்கு வந்த பின்னரும் தகராறு ஓயவில்லை. நேற்று முன்தினம் மதியமும் தகராறு ஏற்பட்டது.

சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி.யில் அதிக சவுண்ட் வைத்து தகராறு செய்தனர். ஆத்திரம் அடைந்த மாரிமுத்து அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் மரிய சத்யாவின் தலை, கை, கால்கள், உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் கழுவியுள்ளார். தலையை தனியாகவும், மற்ற உடல் பாகங்களை பிரித்தும் 3 டிராவல் பேக்குகளில் வைத்துக் கொண்டு எங்காவது வீசிவிடலாம் என்று இரவு 9.20 மணியளவில் வெளியே வந்துள்ளார். அப்போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் கேட்ட போது வீட்டை காலி செய்ய போகிறேன். என் மனைவி திருந்தியபாடில்லை என கூறி உள்ளார்.

ஆட்டோவுக்காக அவர் பேக்குடன் நின்றிருந்த சமயத்தில், அந்த பகுதியில் நின்ற நாய் ஒன்று அருகில் வந்து குரைக்க தொடங்கியது. மாரிமுத்து வைத்திருந்த பேக்குகளை சுற்றி சுற்றி நாய் விடாமல் குரைத்தது. சிறிது நேரத்தில் வேறு சில நாய்களும் வந்து பேக்கை மோப்பம் பிடித்தவாறு குரைத்தன. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பேக்கை திறந்து பார்த்த போது தான், மரிய சத்யாவை கொன்று உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது. உடனடியாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பேக்குகளை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கொலை வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். நேற்று காலை போலீசார் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது கொலை செய்தது எப்படி? என்பது குறித்து நடித்து காட்டினார்.

பரபரப்பு வாக்குமூலம்: மாரிமுத்து அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், மரிய சத்யாவுக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நான் இறைச்சி வெட்டும் வேலைக்கு செல்வேன். மனைவி மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி போனில் பேசுவார். எனக்கு இது பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் 40 நாட்களுக்கு முன் பால்குளம் வந்து குடியேறினோம். இங்கு வந்த பின்னரும் தகராறு நீடித்தது. இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் கழுத்தில் வெட்டினேன். இதில் அவர் இறந்தார். உடலை மறைக்க துண்டுகளாக்கி யாருக்கும் தெரியாமல் பேக்கில் அடைத்து பல்வேறு இடங்களில் வீசி விட முடிவு செய்து கொண்டு சென்ற போது நாய் குரைத்ததால் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

* 4 மணி நேரம் பேக்கில் இருந்த உடல் பாகங்கள்
நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதே மனைவியை அரிவாளால் வெட்டி மாரிமுத்து கொலை செய்து விட்டார். பின்னர் அரிவாளால் துண்டு துண்டாக வெட்டி உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்ன சத்தம் என கேட்ட போது, காலண்டர் தொங்க விட ஆணி அடிப்பதாக கூறியுள்ளார். உடல் பாகங்களை குளியல் அறைக்குள் கொண்டு சென்று 2 மணி நேரம் வரை கழுவி உள்ளார். பின்னர் அவற்றை பேக்குகளில் அடைத்துள்ளார். இரவு 9 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த பின், உடல் துண்டுகள் இருந்த பேக்கை வெளியே எடுத்து வந்துள்ளார். ஆனால் தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் மாரிமுத்து சிக்கி கொண்டார்.

* சமாதானம் பேசி அழைத்து வந்தார்
மாரிமுத்துவுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மரிய சத்யா சென்று உள்ளார். அவருடன் நேற்று முன் தினம் போனில் பேசி சமாதானமாக செல்வோம் என கூறி மாரிமுத்து அழைக்க சென்றார். சமாதானம் பேச சென்ற போதும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஆட்டோவில், சண்டை போட்டவாறே வீட்டுக்கு வந்துள்ளனர் என்பதையும் அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர்.

The post நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Anjugramam ,Kumari district ,Tirunelveli ,Palayankottai Manakavalam Pillai Nagara… ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...