திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் மாட்டு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருந்நதாக வௌியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த கலப்படம் நடந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது பெரும் புயலை கிளப்பி உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு திருப்பதி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் விதமாக தவறான தகவலை பரப்பி உள்ளார். இதற்கு பரிகாரம் செய்யும் வகையில் இன்று ஏழுமலையான் கோயிலில் பரிகார பூஜை செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி திடீரென்று தன் திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, “மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து இட்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். நான் திருப்பதி வருவதால் என்னுடைய கட்சி முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆனால் பாஜவை சேர்ந்தவர்கள் பல மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் வேண்டும் என்றே இதுபோன்று நடப்பதால் எனது திருப்பதி பயணத்தை ரத்து செய்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகே வேற்று மதத்தினர் கோயிலுக்கு வந்தால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று போர்டுகள் வைக்கப்பட்டது. ஜெகன்மோகன் திருப்பதிக்கு வருகை தரும் பயணம் ரத்து செய்யப்பட்டதால் கோயிலில் வைக்கப்பட்ட போர்டுகள் எடுக்கப்பட்டது.
The post லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்; திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன்: ஏழுமலையானை தரிசிப்பதை தடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.