திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முழுமையாக கலைக்கப்பட்டது.
பேரவை தேர்தலில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில் புதிய அறங்காவலர் குழு அமைப்பதில் காலதாமதம் ஆனது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் குழு தலைவராக தொல்லினேனி ராஜகோபால் நாயுடு (பி.ஆர்.நாயுடு) நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஜோதுலா நேரு, பிரசாந்திரெட்டி, எம்.எஸ்.ராஜூ, பனபாக லட்சுமி (முன்னாள் ஒன்றிய அமைச்சர்), உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தமிழகத்தின் சார்பில் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் பி.ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 24 பேர் கொண்ட புதிய அறங்காவலர் குழு விரைவில் பொறுப்பேற்க உள்ளது. அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானின் புனிதத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்கள் பணி இருக்கும்.
திருமலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கடந்த 5 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் தேவஸ்தான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததை காணமுடிகிறது. இதுதொடர்பாக பதவியேற்ற பின்னர் முதல்வரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு சிறந்த சேவையை தர தயாராக உள்ளோம்.
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அதிகபட்சம் 1மணி நேரத்தில் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கம், வெள்ளி மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* பேப்பர் பாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்
திருமலையில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு தடை உள்ளதால் கண்ணாடி பாட்டில்கள் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் பக்தர்கள் சிரமமடைகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக மலிவு விலையில் பேப்பர் பாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று புதிய அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.
The post சிறந்த சேவையை தர நடவடிக்கை திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசிக்க ஏற்பாடு: புதிய அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.