×

நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் மண்டபத்தை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு பெண்கள் சாமியாடி எதிர்ப்பு

உளுந்தூர்பேட்டை, செப். 27: உளுந்தூர்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் மண்டபத்தை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு பெண்கள் சாமியாடி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூல சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில் காளியம்மன் கோயில் தேர் நிறுத்துவதற்காகவும், கோயில் பொருட்கள் வைப்பதற்காகவும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரூ.20 லட்சம் செலவில் மண்டபம் கட்டினர். ஆனால் இந்த மண்டபம் அருகில் உள்ள வீடுகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே மண்டபம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் மண்டபம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனடிப்படையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மண்டபத்தை இடிப்பதற்காக வாகனங்களுடன் சென்றனர். அப்போது அங்கு திரண்ட 100 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு என்பதால் மண்டபத்தை இடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார், ஆனால் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மண்டபத்தை கட்டியுள்ளோம்.

இதனை இடிக்க கூடாது என கூறி போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சூலாயுதம் உள்ளிட்ட பொருட்களை ஏந்தியபடி மண்டபத்தை இடிக்க கூடாது என சாமி ஆடியபடி விழுந்து புரண்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு பொதுமக்கள் சார்பில் 45 நாள் அவகாசம் அளிக்குமாறு கேட்டு அனைவரும் கையெழுத்து போட்டு மனு வழங்கினர். இதனால் மண்டபம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் மண்டபத்தை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு பெண்கள் சாமியாடி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Panchayat ,Mula Samudram ,Ulundurpet, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே விவசாய...