×

உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி படுகாயம்

உளுந்தூர்பேட்டை, டிச. 21: விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைத்த மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேல்முருகன் (42). விவசாயியான இவர் நேற்று காலை தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த விவசாய நிலத்தில் மானாவாரிப் பயிராக உளுந்து பயிரிடப்பட்டுள்ளதால் வன விலங்குகளை தடுக்க விவசாய நிலத்தை சுற்றி அனுமதியின்றி உயர் மின்னழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் இழுத்து மின்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பக்கமாக சென்ற வேல்முருகன் காலில் மின்சாரம் பாய்ந்ததில் கதறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்த மனைவி கோதாவரி (38) அங்கு சென்று கணவரை மீட்க முயன்றார். அப்போது கோதாவரி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதும், சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்று மின்மாற்றியை நிறுத்தி இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்ததால் கணவன், மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Velmurugan ,Pandur ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 8 ஆண்டு சிறை