×

கண்மாய் பகுதியில் பனை விதை நடும் பணி: 2 அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

புதுக்கோட்டை, செப்.26: புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு கண்மாய் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணியினை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோரம் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு கண்மாய் பகுதியில், பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் மரமாகவும், தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் விளங்கும் பனைமரத்தின் எண்ணிக்கையினை அதிகரித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் வகையில்,

இன்றையதினம் கவிநாடு கண்மாய் பகுதியில் பனை விதைகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய மட்டை அழகிய மனை கூரை வேயவும், பூ (பாலை) பதநீர் மூலம் ஊட்டச்சத்து கிடைத்து உடம்பிற்கு மிகுந்த ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத்தரவும் பயன்படும். மேலும் இதன் காய் நொங்கு எனும் உணவாக மாறி, இதன்மூலம் உடலிற்கு குளிர்ச்சி மற்றும் தேவையான ஆற்றலை தரவல்லது. இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்க பயன்படும். இதன் கனி உண்ணவும், இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்கவும் பயன்படும். இந்த கிழங்கை வேகவைத்து உண்டால் உடம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும்.

இந்த மரத்தை நகரத்திலும் வளர்க ஏதுவானது. அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது. இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு என்பதால் பக்கவாட்டில் வளர்ந்து கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்காது. இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிகம் உறிஞ்சும் தன்மை கிடையாது. பனை மரம் வளர்க்க அதிகமான இடம் பக்கவாட்டு, மேல்மட்டம் தேவை இல்லை. குறைந்த அளவு இருந்தால்போதும். பனைமரம் ஏரி குளங்களில் மண் அரிப்பை தடுக்கும்.பனை ஓலைகள் கலைபொருட்கள், பாய், பெட்டி போன்றவற்றை செய்யவும் பயன்படுகிறது. எனவே எண்ணிலடங்கா பயன்களைத் தரும் இந்த பனை மரத்தின் விதைகளை விதைத்து வளரும் வரையில் உரிய முறையில் பாதுகாத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு பனை மரத்தின் பயன்கள் அறிந்து அவற்றைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் மாவட்டம் தோறும் பனை விதைகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கவிநாடு கண்மாய் பகுதியில் பனை விதைகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையது. நம் மொழியின் அரிய இலக்கியங்களும் சுவடிகள் மூலமே பல நூற்றாண்டுகள் கடத்தப்பட்டன. இந்த பனை மரத்தின் மூலம் நுங்கு, பதநீர், பனைமட்டை, நார், ஓலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு எனப் பனையின் பயன்கள் எண்ணிலடங்கா ஆகும்.

வருடத்துக்கு ஒரு பனை மரத்தின் மூலம் 180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி, 20 கிலோ பனை நார், 10 கிலோ விறகு, 6 பாய், 2 கூடை உள்ளிட்ட பல்வேறு பயன்தரும் பொருட்களை பெற முடியும். பதநீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும். அதன் கருப்பட்டி, கல்கண்டு ஆகியவை சிறந்த நாட்டு மருத்துவம். கருப்பட்டி சேர்க்கும் பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி வரும் வாய்ப்பு குறைவு. பனம்பழம் மிக அதிகமாக வைட்டமின் – சி கொண்டது. அதன் கொட்டை அதிக புரதசத்து நிறைந்தது. கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது. இத்தகைய எண்ணிலடங்கா பயன்களை தரும் பனை மரத்தினை அனைவரும் வளர்த்து பேணிகாத்திட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், நடப்பட்டுள்ள பனை விதைகள் வளரும் வரை உரிய முறையில் பாதுகாத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.முத்துராஜா, மாவட்ட வன அலுவலர், கணேசலிங்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்.செல்வக்குமார், மாமன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி,செந்தில், நைனாமுகமது, பாலு உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post கண்மாய் பகுதியில் பனை விதை நடும் பணி: 2 அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Pudukottai ,Ministers ,Raghupathi ,Meiyanathan ,Pudukottai district, ,Kavinadu ,Law Minister ,
× RELATED மதுரை வண்டியூர் கண்மாயை உரிய...