×

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: 63 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை; பிரபாத் ஜெயசூரியா அசத்தல்

காலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 305 ரன், நியூசிலாந்து 340 ரன் எடுத்தன. 35 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 309 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் படேல் 6, வில்லியம் ஓ’ரூர்கே 3, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 4ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்திருந்தது. கை வசம் 2 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் இன்னும் 68 ரன் தேவை என்ற நிலையில் ரச்சின் ரவிந்திரா (91 ரன்), அஜாஸ் படேல் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ரச்சின் 92 ரன் (168 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம் ஓ’ரூர்கே (0) இருவரும் பிரபாத் ஜெயசூரியா பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 211 ரன்னுக்கு (71.4 ஓவர்) ஆல் அவுட்டானது. அஜாஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூரியா 30.4 ஓவரில் 7 மெய்டன் உள்பட 68 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ரமேஷ் மெண்டிஸ் 3, அசிதா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. பிரபாத் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் இதே மைதானத்தில் செப். 26ல் தொடங்குகிறது.

The post நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: 63 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை; பிரபாத் ஜெயசூரியா அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Zealand ,Sri Lanka ,Prabhat Jayasuriya ,Galle ,New Zealand ,Galle International Stadium ,Prabhat Jayasuriya Asatal ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் முதல் டி20 நியூசிலாந்து அபார வெற்றி