சிட்னி: ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான கவாஸ்கர் – பார்டர் கோப்பைக்கான 5வது டெஸ்டின் 2ம் நாளான நேற்று ஆஸி 181 ரன்னுக்குள் சுருண்டது. இந்தியா 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்னுடன் திணறிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. முதலில் களமிறங்கிய பும்ரா தலைமையிலான இந்திய அணி, ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 72.2 ஓவருக்கு 185 ரன்னில் சுருண்டது. அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 ஓவருக்கு ஒரு விக்கெட் இழந்து 9 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 2வது நாளான நேற்று 176 ரன் பின்தங்கிய நிலையில் ஆஸி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. களத்தில் இருந்த சாம் கோன்ஸ்டாசுடன், மார்னஸ் லபுஷனே இணைந்தார். அவர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். புதுமுக வீரர் கோன்ஸ்டாஸ் 23 ரன்னில் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து வந்த டிராவிஸ் 4, ஸ்டீவ் ஸ்மித் 33, அலெக்ஸ் கேரி 21, கேப்டன் பேட் கம்மின்ஸ் 10, மிட்செல் ஸ்டார்க் 1, பியு வெப்ஸ்டர் 57, ஸ்காட் பொலாண்ட் 9 ரன்னில் அவுட்டாகினர். லயன் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் ஆஸி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன் எடுத்து இந்தியாவை விட 4 ரன் பின் தங்கி இருந்தது.
இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3, கேப்டன் பும்ரா, நிதிஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இந்திய வீரர்கள், ஆஸியின் பொலாண்ட் வீசிய நேர்த்தியான பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறினர். அதனால் சீரான இடைவெளியில் ஜெய்ஸ்வால் 22, ராகுல் 13, சுப்மன் கில் 13, கோஹ்லி 6 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். விதிவிலக்காக ரிஷப் பண்ட் வெறும் 33 பந்துகளில் 61 ரன் விளாசி அவுட்டானார்.
பின் நிதிஷ்குமார் 4 ரன்னில் நடையை கட்டியதால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து தோல்வியை நோக்கி போட்டியை நகர்த்திக் கொண்டிருந்தது. ஜடேஜா 8, வாஷிங்டன் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஆஸி தரப்பில் பொலாண்ட் 4, கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 145 ரன் முன்னிலையுடன் 3வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர உள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் ஆஸிக்கு குறைந்தபட்சம் 300 ரன்னை இலக்காக நிர்ணயித்தால் வெற்றி அல்லது டிரா செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு உண்டு.
* முதல் ஓவரில் 16 ரன் 0, 4, 4, 4, 0, 4: ஜெய்ஸ்வால் அசத்தல்
ஆஸியுடன் நேற்று நடந்த போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரை ஆடிய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தை அடிக்காமல் விட்டு பிள்ளையார் சுழி போட்டார். அடுத்தடுத்த 3 பந்துகளை பவுண்டரிகளாக சிதறடித்த ஜெய்ஸ்வால் 5வது பந்தை தடுத்து ஆடினார். பின் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு துரத்தி அடித்தார். இதன் மூலம் முதல் ஓவரில் 16 ரன்களை அவர் விளாசினார். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற அரிய சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தி உள்ளார்.
* பண்ட் சாதனை: 29 பந்தில் 50 ரன்
ஆஸியுடனான 5வது டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் ஆடிய ரிஷப் பண்ட் வெறும் 29 பந்துகளில் 50 ரன் குவித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 33 பந்துகளில் 66 ரன் குவித்து அவுட்டானார். இதில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன், 2022ல் பெங்களூருவில் இலங்கைக்கு எதிராக ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 50 ரன் குவித்து நிகழ்த்திய சாதனை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தவிர ஆஸி மண்ணில் குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் விளாசிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் ராய் பிரெட்ரிக்ஸ் (1975), இங்கிலாந்தின் ஜான் பிரவுட் (1895) 33 பந்துகளில் ஆஸி மண்ணில் அரை சதம் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது.
* 47 ஆண்டு சாதனையை கிளீன் போல்டாக்கிய பும்ரா
நேற்றைய போட்டியில் இந்திய கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா, 10 ஓவர்கள் மட்டுமே வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் மொத்தம் 32 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் ஆஸி மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியராக புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய முன்னாள் கேப்டன் பிஷண் சிங் பேடி, 1977-78ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு தொடரில் 31 விக்கெட் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. போட்டியின் இடையே பும்ராவுக்கு கடுமையான முதுகுப் பிடிப்பு ஏற்பட்டதால் இந்திய மருத்துவ நிபுணருடன் களத்தை விட்டு வெளியேறிய அவர் காரில் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. பும்ரா களத்தில் இல்லாததால் விராட் கோஹ்லி தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.
The post விக்கெட்டுகளை இழப்பதில் ஆஸி.யும் போட்டா போட்டி! 2வது இன்னிங்சில் இந்தியா 141/6 appeared first on Dinakaran.