புதுடெல்லி: உலக செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) புதிய இஎல்ஓ ரேட்டிங் பட்டியலில் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசி முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளனர்.
ஃபிடேவின் புதிய ரேங்கிங் பட்டியலில், உலக நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 2831 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2 மற்றும் 3வது இடங்களில் அமெரிக்க வீரர்களான பேபியானா கரவுனா (2803 புள்ளி), ஹிகாரு நகமுரா (2802 புள்ளி) உள்ளனர். 4வது இடத்தில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியும் (2801 புள்ளி), 5வது இடத்தில் தமிழ்நாட்டின் குகேஷும் (2777 புள்ளி) உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 2750 இஎல்ஓ புள்ளிகளுடன் 10ம் இடத்திலும், பிரக்யானந்தா 2741 புள்ளிகளுடன் 13ம் இடத்திலும் உள்ளனர்.
மகளிர் பிரிவில் சீன வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஃபிடே ரேங்கிங் பட்டியலில் முதல் 4 இடங்களை சீன வீராங்கனைகள் கைப்பற்றி உள்ளனர். முதல் இடத்தில் யிபான் ஹோ (2633 புள்ளி), 2வது இடத்தில் வென்ஜுன் ஜு (2561 புள்ளி), 3ம் இடத்தில் ஜாங்யி டான் (2561 புள்ளி), 4ம் இடத்தில் டிங்ஜீ லே (2552 புள்ளி) உள்ளனர். சமீபத்தில் உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி 2523 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா 16ம் இடத்தையும், தமிழ்நாட்டின் வைஷாலி 19ம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.
The post ஃபிடே ரேட்டிங் புதிய பட்டியல் டாப் 5ல் குகேஷ், எரிகைசி: மகளிரில் கொனேருவுக்கு 6ம் இடம் appeared first on Dinakaran.