திருவொற்றியூர்: எண்ணூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் குளித்த மற்றொரு மாணவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை, குருதனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஹரிஷ் (17), கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இச்சிறுவன், நேற்று கல்லூரிக்கு போகாமல் தன்னுடன் படிக்கும் மோகன் என்ற மாணவனுடன் ரயில் மூலம் எண்ணூர் வந்துள்ளார். அங்கிருந்து சின்னகுப்பத்திற்கு வந்த மாணவர்கள் இருவரும் கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி ஹரிஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன், ஹரிஷை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் சுதாரித்துக்கொண்ட மோகன் உயிருக்கு போராடிய நண்பன் ஹரிஷை காப்பாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நீந்தி கரைக்கு வந்தார்.
ஆனாலும் அதிகளவில் கடல் நீரை குடித்ததால் அவர் மயக்கமடைந்தார். அப்போது அங்கு மீன் வலைகளை சரி செய்துகொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக பைபர் படகில் சென்று கடலில் மூழ்கிய ஹரிஷை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், மோகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன் போலீசார் கடலில் தேடியதில் மாணவன் ஹரிஷ் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எண்ணூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவன் பரிதாப பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.