×

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட முடியும். ஒரு பக்கம் சமையல் வேலை நடக்கும். மறுபக்கம் பள்ளிக்கு செல்ல குழந்தைகளை தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதற்கிடையில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தேவையான விஷயங்களை பார்க்க வேண்டும். இது அவர்களின் இயல்பு. ஆனால் தற்போது பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமில்லாமல் தன்னோட திறமைகளை வெளிப்படுத்த வேலைக்கும் செல்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் ரூபி காயத்ரி சரவணன்.  காயு பாபுஜி என்று அழைக்கப்படும் இவர் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார்.

இவர் அடிப்படையில் ஒரு ஓவியர். எழுத்து மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் பெண்களின் மேம்பாடு குறித்து கட்டுரைகளை தன்னுடைய இணைய பக்கத்தில் பிளாக்காக எழுதி வருகிறார். இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முடி நன்கொடை செய்யச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே ஓவியம் வரைவதில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. எங்க வீட்டில் என்னுடைய ஆர்வத்தை பார்த்து எனக்கு முறையாக ஓவியப் பயிற்சி அளித்தாங்க. ஏழாம் வகுப்பு முதல் நான் முறையாக ஓவியம் வரைய
பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதில் தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயின்டிங் போன்ற நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட ஓவியங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு மற்ற ஓவியங்களுக்கான பயிற்சியும் எடுத்துக் ெகாண்டேன்.

ஓவியக்கலை மேல் இருந்த ஆர்வத்தினால் கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் படிச்சேன். அதனைத் தொடர்ந்து ஊடகத் துறையில் கலை இயக்குநராக வேலை பார்த்தேன். ஆனால் என் அப்பாவிற்கு நான் UPSC தேர்வினை எழுத வேண்டும் என்று விருப்பம். நானும் பிரிலிமினரி தேர்வு வரை தேர்ச்சிப் பெற்றேன். ஆனால் அதன் பிறகு திருமணம், குடும்பம், குழந்தைகள் என்பதால் என்னால் அடுத்தகட்ட தேர்வினை எழுத முடியவில்லை.

இதற்கிடையில் இரண்டு வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், வயது வரம்பும் முடிந்து போனது. அதனால் UPSC கனவினை கைவிட வேண்டியதாயிற்று. அதனால் நான் என் கலை துறை மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஓவியங்கள் மற்றும் பலவிதமான கலைப்பொருட்களுக்கான ஸ்டுடியோ அமைத்தேன். அதன் மூலம் விற்பனையும் செய்து வருகிறேன்’’ என்றவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பற்றி விவரித்தார்.

‘‘என் வாழ்க்கையில் நான் சந்தித்த அந்த இழப்புகள்தான் என்னை இதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை தூண்டியது. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நான் ரத்த தானத்தில் ஈடுபட்டு வந்தேன். அதுதான் என்னுடைய மற்ற சேவைக்கான ஆரம்ப புள்ளி என்று சொல்ல வேண்டும். அது தீவிரமாக காரணம் என்னுடைய உயிர் தோழியின் பிரிவு. பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படிச்சோம். இருவருக்கும் ஒரே வயதில் திருமணம், தாய்மை போன்ற பல சந்தோஷமான தருணங்களை நாங்க பகிர்ந்து கொண்டோம். ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் அவளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கடைசி நிலை என்பதால், அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தைக்கு ஒன்றரை வயசுதான் என்பதால் அந்த சம்பவம் என்னை பெரிய அளவில் பாதித்தது. சில வருடத்தில் அவள் தவறிட்டாள். சிகிச்சையின் போது முடி உதிரும் என்பதால், மொட்டை அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில் அவளை பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருந்தது. இந்த நோய் பெரியவர்களை மட்டுமில்லை சின்னக் குழந்தைகளையும் பாதிக்கிறது. நோயை பொறுத்தவரை என்னால் எதுவுமே செய்ய முடியாது.

ஆனால் அவர்கள் முகத்தில் சின்ன சந்ேதாஷத்தை கொடுக்க முடியும். அதனால் என் முடியினை தானமாக கொடுத்தேன். அதில் இருந்து அவர்களுக்கு விக் செய்து கொடுத்த போது, அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இதனை மற்றவர்களுக்கும் வலியுணர்த்த நினைத்தேன். முடி தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதனைத் தொடந்து என் உடல் உறுப்புகளையும் தானம் செய்து இருக்கிறேன்.

எனக்கு 17 வயசு இருக்கும் போது என் தந்தையை இழந்தேன். அப்போது அவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுத்திருந்தால், மற்றவர்கள் மூலம் அவர் வாழ்வதை பார்த்து இருக்கலாம். அந்த வயதில் எனக்கு அது தெரியல. இது போன்ற இழப்புகள் என்னை மனதளவில் பாதித்து இருந்தாலும், அதில் இருந்து நான் மீண்டு வரத்தான் இது போன்ற விஷயங்களை நான் மட்டுமில்லாமல், மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றவர், தானம் முறைகள் குறித்தும் வழிகாட்டி வருகிறார்.

‘‘பலருக்கு இது போன்றவற்றை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் எப்படி செய்ய வேண்டும். யாரை அணுகணும் என்று தெரியாது. சிலர் நம்முடைய முடிகளில் இருந்து தயாரிக்கப்படும் விக்குகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அப்படி இல்லாமல், சரியானவர்களுக்கு போய் சேரவேண்டும் என்பதற்காகவே ‘ஹேப்பி ஹேர் டொனேஷன்’ என்ற இன்ஸ்டா பக்கத்தை என்னைப் போல் முடியினை தானம் செய்தவர்களுடன் சேர்ந்து 2020ல் துவங்கினேன்.

அதன் மூலம் எங்களை அணுகுபவர்களுக்கு முடி தானம் குறித்து நாங்க வழிகாட்டி வருகிறோம். தற்போது எங்களின் இந்தப் பக்கத்தினை டாக்டர் செரியன் ஃபவுண்டேஷன் அங்கீகரித்து, தானம் செய்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வருகிறார்கள். தற்போது பெண்கள் மட்டுமில்லை, ஆண்களும் தானம் செய்ய முன்வருகிறார்கள்’’ என்று கூறும் காயத்ரி பெண்களின் முன்னேற்றம் குறித்து கட்டுரை எழுதுவது மட்டுமில்லாமல், தன் தாயாரை தொழில்முனைவோராக மாற்றி உள்ளார்.

‘‘ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முதலில் அதனை நாம் நம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். அப்படித்தான் என் அம்மாவினை நான் ஊக்கப்படுத்தினேன். அவங்களுக்கு 57 வயதாகிறது. நான் அளித்த உற்சாகத்தில் இப்ப அவங்க ‘கணுஸ் ஹெல்த் மிக்ஸ்’ என்ற பெயரில் சத்துமாவுகளை தயாரித்து கடந்த மூன்று வருடமாக வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார். நான் என்னுடைய ஓவியங்களுக்காக சிறந்த தொழில்முனைவோர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு ‘ஐகானிக் விருதினை’ பெற்றேன்.

அதைப் பார்த்த அம்மாவும் தன்னுடைய 60 வயதில் சிறந்த தொழில்முனைவோர் விருதினை பெறுவேன் என்று உற்சாகமாக சொன்ன போது மனதுக்குள் எதையோ சாதித்தது போல் இருந்தது.எந்த விஷயமா இருந்தாலும் முதல்ல நம்மிடம் இருந்து ஆரம்பிக்கணும். அப்பதான் நாம மத்தவங்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க முடியும்’’ என்று நெகிழ்ச்சியாக கூறினார் ரூபி காயத்ரி.

தொகுப்பு: விஜய ஷாலினி

The post மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Doshi ,Dinakaran ,
× RELATED பெண்களின் செல்ஃப் கேர் ‘0’வாக உள்ளது!