பண்ருட்டி, செப். 10: பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையத்தின் பின்புறம் பேருந்துகள் வெளியே வரும் வழியில் அன்னை இந்திராகாந்தி சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் இந்த கட்டிடம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அப்பகுதியில் திரண்ட பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.
இந்த தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. காலை 9 மணி அளவில் கடை திறந்தபோது ஏற்பட்ட தீவிபத்தால் குறைந்த அளவு ஊழியர்களே உள்ளே இருந்ததால் அவர்கள் உடனடியாக வெளியே ஓடிச்சென்று உயிர் தப்பினர். மதிய நேரம் நடந்திருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பேருந்து நிலையம் பின்புறம் பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சாம்பல் appeared first on Dinakaran.