தேனி, நவ.10: சுற்றுப்புறத் தூய்மையால் டெங்கு காய்ச்சலை விரட்டலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தற்போது அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலான அளவில் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நாள்தோறும் புகை மருந்து தெளிப்பது மற்றும் வீடு வீடாகச் சென்று மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சமூக வலைதளங்களிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு குறித்த தகவல்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்கள் குணப்படுத்தக்கூடியவைதான். நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு உருவாகும். எனவே, வீடுகளில் சேகரிக்கும் தண்ணீரை எப்போதும் இறுக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும். கண்ட இடங்களில் நீர் தேங்க விடக்கூடாது. நீர் தேங்கும் வகையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் டயர், சிரட்டை, உடைந்த பாத்திரங்கள், வளைந்த ஓடுகள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். பிரிட்ஜின் பின்புறத்தில் நீர் தேங்கும் பகுதியை வாரத்திற்கு ஒருமுறையாவது கழுவ வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அதன் முட்டை பருவத்திலேயே அழித்து விட வேண்டும். அதனை வளர விட்டால், அதனால் பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.
The post சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் டெங்கு காய்ச்சலை விரட்டலாம் மருத்துவர்கள் அட்வைஸ் appeared first on Dinakaran.