* 1,519 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது
* பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் குவிப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் மட்டும் 1519 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர். விநாயகர் பெருமான் அவதார திருநாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கணபதி ஹோமம் செய்து, விநாயகர் சிலைகளுக்கு பால், நெய், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விநாயகருக்கு தேங்காய், பழ வகைகள், விளாங்காய், சுண்டல், அவல் பொரி, கொழுக்கட்டை, பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்மிட வந்த பக்தர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் வீடுகளில் விநாயகர் சிலைகளுக்கு அவல், பொரி, பழங்கள் படைத்தும் வழிபட்டனர். மேலும் பல்வேறு கோயில்களில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை ஒரு வாரத்துக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் பூஜைக்கு தேவையான விநாயகர் குடை, எருக்கம் பூ மாலை, அருகம்புல், மா இலை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, விலாம்பழம், கம்புகதிர், மக்காச்சோளம், கலாக்காய், மாதுளம், கொய்யா, நாவல், திராட்சை மற்றும் செங்கரும்பு போன்ற அனைத்து பொருட்களின் விற்பனை நேற்று படுஜோராக நடைபெற்றது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வாழை கன்று கட்டு ரூ.60, ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100, 2 கம்பு கதிர் ரூ.40, மக்காச்சோளம் ரூ.10, ஆப்பிள் கிலோ ரூ.250, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்சு ரூ.250, கொய்யா ரூ.100, மஞ்சள் வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதை காண முடிந்தது.
மேலும், விநாயகர் பூஜைக்கு தேவையான பழம், குடை, எருக்கம்பூ மாலை உள்ளிட்ட ஒரு செட் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.
மேலும் நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் களிமண், காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக 3 அடி முதல் 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கடலை மிட்டாய்
கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சென்னையில் 1,519 சிலைகளை வைப்பதற்கும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 64,217 போலீசாரும், சென்னையில் பொறுத்தவரை 10 ஆயிரம் போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆவடி மாநகர காவல் எல்லையில் 3,500 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 3,300 காவலர்கள் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 16,800 போலீசார் மற்றும் 2,650 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வருகிற 11ம் தேதி மற்றும் 14, 15ம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்க கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை ேபாலீசார் விதித்துள்ளனர். சிலைகளை கரைக்க சென்னையில் பட்டினம்பாக்கம் சீனீவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடத்தில் காவல்துறையின் மூலம் கிரேன்கள், உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.