×

காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேசியக் கொடி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடக்கும் தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு


ஜம்மு: காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்குள்ள சட்டப்பேரவைக்கு தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் முதன்முறையாக தேர்தல் நடப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்.18,25, அக்.1 என்று 3 கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜ தேர்தல் அறிக்கையை வெளியிடவும், கட்சியின் பிரசார வியூகம் குறித்து ஆலோசிக்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். 2ம் நாளான நேற்று அவர் கூறியதாவது: காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வரவிருக்கும் தேர்தல்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பிறகு, இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு அரசியலமைப்புகளின் முந்தைய நடைமுறையைப் போலல்லாமல், நமது தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் முதல் முறையாக தேர்தல்கள் நடக்கின்றன.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்களிடம் ஒரே ஒரு பிரதமர் இருக்கிறார், அவர் தான் மோடி. ஆனால் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஜம்மு-காஷ்மீரை மீண்டும் ஊழல் மற்றும் பயங்கரவாதத்தின் நெருப்பில் தள்ள முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு காஷ்மீரில் 70 சதவீத தீவிரவாத தாக்குதல்களை குறைத்துவிட்டது. எனவே தேசியமாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் காஷ்மீரில் ஆட்சிக்கு வரவே முடியாது. காஷ்மீரில் 10 சதவீத வாக்குகள் பதிவாகியதைக் கொண்டாடிய அரசுகள் இருந்தன. ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 58.46 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதன் அதிசயத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி. பயங்கரவாதம் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை இல்லை.

காஷ்மீர் மாநில அந்தஸ்தை பற்றி பேசுகிறார்கள். இங்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கப் போவது யார் என்று நான் பரூக் அப்துல்லா மற்றும் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். அதை உங்களால் திரும்பக் கொடுக்க முடியாது. ஏன் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்?. இங்கு பயங்கரவாதம் அதிகரித்த போது அப்துல்லாவும் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்கு ஓடிவிட்டனர். அதே நேரத்தில் இளைஞர்கள் பயங்கரவாதத்தில் வீழ்ந்தனர். அதை நாங்கள் அழித்தோம். நீங்கள் விரும்பும் யாருக்கும் வாக்களியுங்கள். ஆனால் அவர்களை மட்டும் வெற்றிபெறச் செய்யாதீர்கள். அவர்களின் விருப்பம் பயங்கரவாதத்தை மீண்டும் கொண்டுவரும். காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்தும். இவ்வாறு பேசினார்.

The post காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேசியக் கொடி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடக்கும் தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Legislative Assembly ,Union Minister ,Amit Shah ,JAMMU ,Union Home Minister ,Legislative ,Assembly ,Kashmir Legislative Assembly ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்