×
Saravana Stores

சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை; கொடநாடு கொலை நடந்த தினத்தில் குற்றவாளிகளுடன் பேசிய விஐபி யார்?.. வனத்துறை சோதனைச்சாவடிகளை கடந்த வாகனங்கள் விவரம் கேட்பு


கோவை: கொடநாடு கொலை, கொள்ளை நடந்த தினத்தில் குற்றவாளிகளுடன் பேசிய விஐபி யார்? என்று சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த காவலாளி கொலை மற்றும் ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை தொடர்பாக 12 பேர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்களது வங்கிக்கணக்கு எண்களையும் பெற்று, அவர்களின் பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய விவரங்களை கேட்டு வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.மேலும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடநாடு சம்பவம் நடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் சிலர் செல்போனில் பேசியுள்ளனர். அவ்வாறு சந்தேகத்தின் பேரில், 70 பேரின் செல்போன் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கொடுத்து, யாரெல்லாம் சம்பவம் நடந்த அன்று கைதான நபர்களிடம் செல்போனில் பேசியுள்ளனர் என்ற விவரத்தை ஆய்வு செய்து தர கேட்டிருந்தோம். 2 ஆண்டு பேக்கப் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகத்தின் உதவியை நாடினோம். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்து ஆய்வு செய்து சென்றனர்.

அப்போது, 70 பேர் செல்போன் எண்களை வைத்து, அவர்கள் யாரிடம் எல்லாம் பேசியுள்ளனர் என்ற விவரத்தை சேகரிக்க முயன்றனர். ஆனால், இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகி விட்டதால், செல்போன் பேச்சு விவரங்களை மீட்டெடுக்க சற்று கால அவகாசம் வேண்டும். ஆனால், நிச்சயமாக அதன் விவரங்களை சேகரித்து கைதானவர்கள் யாரிடம் எல்லாம் பேசியுள்ளனர், அதில் அரசியல் பிரமுகர்கள், விஐபி யாராவது உள்ளார்களா? என்று தெரிவிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து விட்டு குஜராத் தடயவியல் ஆய்வக நிபுணர்கள் சென்றுள்ளனர். 2வது முறையாக திருச்சி வந்து மீண்டும் ஆய்வு செய்து, அதன் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதுதவிர, சம்பவ தினத்தில், அங்குள்ள வனத்துறை சோதனை சாவடி உட்பட அனைத்து சோதனை சாவடிகளையும் கடந்த கார்களின் விவரங்களை சேகரித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்து சென்ற டெம்போ டிராவலர், சுற்றுலா வாகனம், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் விவரங்களையும் வனத்துறை சோதனை சாவடி அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதற்கான சேகரிப்பு பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை; கொடநாடு கொலை நடந்த தினத்தில் குற்றவாளிகளுடன் பேசிய விஐபி யார்?.. வனத்துறை சோதனைச்சாவடிகளை கடந்த வாகனங்கள் விவரம் கேட்பு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Kodanad ,Coimbatore ,Jayalalithaa ,Sasikala ,Koda Nadu ,Kotagiri ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு...