×
Saravana Stores

ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய மதவாத உணர்வுகளை முறியடிப்போம்: திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம்


சென்னை: அண்மைக்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடிப்போம் என்று திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில், அண்மைக்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, பகுத்தறிவு கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கலைஞரால் திருவாரூரில் தொடங்கப்பட்ட “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை இன்று தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் அமைக்க பணியாற்ற வேண்டும். ஒன்றிய பாஜ அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், ஒன்றிய அரசின் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க மறுக்கிறது. இந்தியாவின் கல்வித் துறையில் முதல் மாநிலமாய் விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னோடி திட்டங்களை முடக்கி விட வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்தில் நியாயமாக வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும் பாஜ அரசின் செயல்பாடு மிக கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது. அவரது இந்த அணுகுமுறையை திருத்திக் கொள்ளாமல் இருப்பாரேயானால், விரைவில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்திற்கு அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி- அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய மதவாத உணர்வுகளை முறியடிப்போம்: திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,Chennai Anna Vidyalayam ,Dinakaran ,
× RELATED திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி,...