×
Saravana Stores

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு கடந்த 3ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் பலாத்கார தடுப்பு மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோதாவின்படி, பலாத்கார வழக்கின் விசாரணையை 21 நாட்களில் போலீசார் முடிக்க வேண்டும். சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகே இந்த மசோதா சட்டமாக மாற்றப்படும். இந்த மசோதா குறித்து மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மேற்குவங்க அரசு கொண்டுவந்துள்ள பலாத்கார தடுப்பு மசோதாவானது, ஆந்திரா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மசோதாக்களின் நகல்.

இது போன்ற மசோதாக்கள் ஏற்கனவே ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மக்களை ஏமாற்றும் போராட்டங்களில் மம்தா பங்கேற்கிறார். மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு தொழில்நுட்ப அறிக்கைகளை ராஜ்பவனுக்கு அனுப்பவில்லை. இதனால் இந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு ராஜ்பவன் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. தொழில்நுட்ப அறிக்கை இல்லாமல் குறிப்பிட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநர் மாளிகையின் மேற்கண்ட அறிக்கையால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : KOLKATA ,GOVERNOR ,WESTERN ASSEMBLY ,Kolkata G. ,Ghar Hospital ,
× RELATED டாணா புயல் எதிரொலி; கொல்கத்தா மற்றும்...