×
Saravana Stores

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் 5வது நாளாக மீட்பு பணி

திருமலை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் 5வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. மேலும் 1000 பேருக்கு ஒருவர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் சீரமைப்பு பணி முடிந்து ரயில் போக்குவரத்து படிப்படியாக தொடங்கியது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் பாதிப்பில் இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகியுள்ளது. எவ்வளவு சேதம் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஓரிருநாளில் அறிவிக்க உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. விஜயவாடாவில் கடந்த 3 நாட்களாக தங்கி முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அவ்வப்போது பொக்லைன் இயந்திரத்தில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துவோடு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இதேபோல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிருஷ்ணா நதியில் 11 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேறிய நிலையில், தற்போது 8 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. இன்னும் படிப்படியாக குறைந்துவிடும். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியாத இடங்களில் டிரோன் மூலம் உணவு, குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
25 கிலோமீட்டர் தூரத்திற்கு பொக்லைன் வாகனம் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டேன். அவர்களது குறைகளை கேட்டறிந்தேன்.

ஒவ்வொரு வீடாக சென்று தீயணைப்புத்துறையினர் அங்குள்ள சேறும், சகதியை வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் தூய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். 1000 குடும்பத்திற்கு 1 அதிகாரி என நியமிக்கப்பட்டு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த அதிகாரியை தொடர்புகொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதை முதல்வர் சந்திரபாபுநாயுடு பார்வையிட்டு வருகிறார். காஜிப்பேட்டை-விஜயவாடா இடையே சேதமான ரயில்வே தண்டவாளம் நேற்று சீரமைக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் 5வது நாளாக மீட்பு பணி appeared first on Dinakaran.

Tags : Vijayawada ,Tirumala ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் சோதனை ஓட்டம்; நீர் வழித்தட...