×
Saravana Stores

கார்த்திகை மாதம் முதல் தேதி பிறப்பு; ஐயப்பன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்


சென்னை: சபரி மலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்கியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோயிலிலும் காலையில் சிறப்பு பூஜைகள் தொடங்கின. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். அவர்கள் எழுப்பிய சரண கோஷம் விண்ணை தொடும் அளவுக்கு ஒலித்தது. சபரிமலையில் கார்த்திகை மாத மண்டல பூஜையும், தை மாதம் நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையும் காண்பது வாழ்வின் பல்வேறு இன்னல்களை தீர்த்து புண்ணியம் அளிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். அதன்படி இன்று (சனி) கார்த்திகை மாதம் பிறந்தது. இதையொட்டி இன்று முதல் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜை செய்து பின் குருசாமி ஆசியுடன் கோயில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

41 நாட்கள் கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு வேஷ்டி, காவி வேஷ்டி அணிவார்கள். காலில் செருப்பு அணிவதில்லை. எந்த தவறும் செய்வதில்லை. மது அருந்துபவர்கள் கூட மது அருந்துவதில்லை. தலையணை இல்லாமல் தரையில் படுத்து உறங்குவார்கள். பிரம்மச்சார்யம் கடைபிடிக்க வேண்டும். காலை, மாலையில் ஐயப்பனை நினைத்து பூஜைகள் செய்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரர் ராஜீவரர், பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் பழைய மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார்.நடை திறந்த முதல் நாளிலேயே நேற்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்பட்டது.

கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு சன்னிதானத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் வானதிர முழங்க புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையையும், பின்னர் வாசுதேவன் நம்பூதிரி மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறந்தனர். இதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கின. அதிகாலை 3.30 மணி முதல் நெய்யபிஷேகமும் தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 25ம் தேதி வரை அதிகாலை 3 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேரும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். ஆனால் நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது.

பம்பை, எருமேலி மற்றும் வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவுக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை அதிகரித்தால் கூடுதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் நாட்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று சனிக்கிழமை என்பதாலும், கார்த்திகை 1ம் தேதி என்பதாலும் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கணூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் 10 ஆயிரம் வாகனங்கள், பம்பையில் 2 ஆயிரம் சிறிய வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் பக்தர்கள் ஓய்வெடுக்க 1000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. குடிநீர், சுக்கு வெந்நீர், பிஸ்கெட் ஆகியவை பக்தர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும் என கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொருத்தவரை சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இன்று காலையில் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் திறண்டு சிறப்பு பூஜைகளை தொடங்கினர்.

பலர் மாலைகள் அணிந்து விரதத்தை தொடங்கினர். இதற்காக கட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல, ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதேபோல தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள், வீடுகளிலும் சிறப்பு கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகளை செய்து, விரதம் தொடங்கினர்.

The post கார்த்திகை மாதம் முதல் தேதி பிறப்பு; ஐயப்பன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karthikai ,Ayyappan ,Sabarimala ,Chennai ,Sabari Hill Ayyappan Temple ,Nungambakkam, Chennai ,Ayappan ,
× RELATED பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை...