×
Saravana Stores

பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்களுக்கு 5 ஆண்டு தடை: தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி (பாலியல் விவகாரங்களுக்கான புகார் குழு) சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் தி.நகரிலுள்ள நாம் பவுண்டேஷன் அரங்கில் நேற்று காலை நடந்தது. தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில், உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா, சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில், குற்றம் செய்தவர்களை விசாரித்து, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து, அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக, தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கிறது. தற்போது இ-மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். யூடியூபில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள், சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும், கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.

* எல்லா துறையிலும் பாலியல் சீண்டல் இருக்கு… நடிகை குஷ்பு பாய்ச்சல்
எல்லா துறைகளில் பாலியல் சீண்டல் இருக்கும்போது, சினிமா துறையை மட்டும் ஏன் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார். நடிகை குஷ்பு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளில் நடித்துள்ளேன். அதுபோன்ற சம்பவங்களில் நான் ஆளாகவில்லை. எல்லா துறைகளில் பாலியல் சீண்டல்கள் இருக்கும்போது, ஏன் சினிமா துறையை மட்டும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

ஹேமா கமிட்டி எல்லா துறைகளில் இருக்க வேண்டும் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை. மருத்துவம், கல்வி, அரசியல், ஐடி துறைகளில் நடக்கவில்லையா, எல்லாத் துறைகளில் நடப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே, நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்தான் என எல்லா பழிகளையும் சினிமா மேலே போட்டு விடுவது தவறானது. எல்லா துறைகளில் ஹேமா கமிட்டி போல விசாரணை இருக்கணும் என்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். யாராக இருந்தாலும் முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். ஏழு தீர்மானங்கள் உள்ளன, அதில் எச்சரிக்கை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போலத்தான் நடவடிக்கை இருக்கும்.

ஏதாவது பிரச்னைகள் இருந்தால் எங்களிடம் வந்து கூறுங்கள், உங்களுக்கு நியாயம் வாங்கி கொடுப்பதற்காக, பாதுகாப்பதற்காக ஒரு அமைப்பு உள்ளது. அதுதான் நடிகர் சங்கம். உங்கள் பிரச்னையை தீர்த்து வைப்போம். விசாகா கமிட்டியில் இதுவரை யாரும் வந்து புகார் கொடுக்கவில்லை. தேசிய மகளிர் ஆணையத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை, மாநில மகளிர் உரிமை ஆணையம் உள்ளது. அதில் ஏன் புகார் கொடுக்கவில்லை, உங்களை யார் தடுத்தது, உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது. இவ்வாறு நடிகை குஷ்பு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார்.

* நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது வழக்கு ஓட்டல் அறையில் 3 நாள் பூட்டி வைத்து பலாத்காரம்: இளம்பெண் புகாரால் வெடிக்கும் பரபரப்பு
பிரபல முன்னணி நடிகரான நிவின் பாலி மீதும் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எர்ணாகுளம் அருகே கோதமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஊன்னுகல் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; என் தோழியான ஸ்ரேயா என்பவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் என்னை தொடர்பு கொண்டவர், துபாய் வந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார். அதை நம்பி கடந்த வருடம் நவம்பர் மாதம் துபாய் சென்றேன்.

அவர் மலையாள சினிமா தயாரிப்பாளரான ஏ.கே.சுனில் என்பவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அங்குள்ள ஓட்டல் அறையில் வைத்து பேசலாம் என்று கூறி அவர் என்னை அழைத்துச் சென்றார். பின்னர் அறையில் வைத்து என்னை சுனில் கொடூரமாக பலாத்காரம் செய்தார். அவரது அடியாட்களைப் போல அறைக்கு வந்த நடிகர் நிவின் பாலி, பினு, பஷீர் குட்டன் ஆகியோர் சேர்ந்து என்னை பலாத்காரம் செய்தனர். 3 நாட்கள் அவர்கள் எனக்கு போதைப்பொருள் கலந்த தண்ணீர் தந்து மயக்கி அறையில் பூட்டி வைத்து கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்தனர்.

இதன் பிறகு நான் அங்கிருந்து தப்பி ஊருக்கு வந்து விட்டேன். பின்னர் கடந்த ஜூன் மாதம் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு நான் தைரியமாக மீண்டும் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நீதி தேவை. நானும், எனது கணவனும் சேர்ந்து ஒரு தொழிலதிபரை ஆசை காட்டி மயக்கி நகை, பணத்தை கொள்ளையடித்ததாக கூறி எங்களது புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புகாரையடுத்து, நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட 5 பேர் மீது கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்த இளம்பெண்தோழியான ஸ்ரேயா மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது.

* ‘தனியாக போராடுவேன்’
கூட்டு பலாத்கார வழக்குபதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே நடிகர் நிவின் பாலி நேற்று இரவு கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; என் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்ணை யார் என்றே எனக்குத் தெரியாது. இது ஒரு பொய்யான புகார். இதன் பின்னணியில் யாராவது இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் பேசினார். என் மீது ஒரு இளம்பெண்ணின் புகார் வந்துள்ளதாகவும் அது குறித்து விசாரித்ததில் உண்மை இல்லை என்று தெரியவந்ததால் புகாரை முடித்து விட்டதாகவும் கூறினார். இப்போது அந்தப் பெண் தான் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதனால் தான் நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன். எனக்கு யாரும் ஆதரவு அளிக்காவிட்டாலும் தனியாக போராடுவேன் என்றார்.

* பலமுறை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளேன்: சிம்ரன் பகீர்
சிம்ரனின் தங்கையும் நடிகையுமான மோனல் கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஒரு நடன இயக்குனர்தான் காரணம் என சிம்ரன் அப்போது குற்றஞ்சாட்டி இருந்தார். இப்போது அவர் தனது தங்கை பற்றியும் திரைத்துறையில் நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து சிம்ரன் கூறியது: 1994ல் முதன் முதலாக டிடி மெட்ரோவில் ஆங்கரிங் செய்தேன். அப்படித்தான் கேமரா முன்பாக வந்தேன். அப்போது 2500 ரூபாய் செக் கொடுத்தார்கள். அதான் என் முதல் சம்பளம். அதன் பின்பாக தான் சினிமாவுக்கு வந்தேன். ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது என்றால், உடனே அப்போதே ஏன் வெளியே சொல்லவில்லை என்கிறார்கள்.

அது ஒரு கேள்வியா? அது எப்படி உடனே சொல்ல முடியும்? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே நேரம் தேவை இல்லையா? பொறுமையாக நாம் உட்கார்ந்து யோசித்துத்தான் அதற்கு எதிர்வினை ஆற்ற முடியும். அதற்கு அவகாசம் தேவை. என்னிடம் அப்படி தவறாகப் பேசினால், கேட்டால் 100% உடனடியாக அப்போதே என் எதிர்ப்பை தெரிவித்துவிடுவேன். சின்ன வயதிலிருந்து நான் இந்த மாதிரியான பிரச்னைகளை, பாலியல் சீண்டல்களை பல முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால், என்னால் அதை இப்போது செல்ல முடியாது.

வார்த்தைகள் மூலமாக உங்களைப் பலாத்காரம் செய்தாலோ அல்லது நடத்தை மூலம் செய்தாலோ அது எப்படி இருந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அமைதி காக்கக் கூடாது. அது தவறு. தங்கை மோனல் எனக்கு மிக நெருக்கமாக இருந்தாள். அவள் என்னைவிட ஸ்டைலான பெண். அவளிடம் இருந்துதான் நான் ஸ்டைலாக எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன். அவளை நிறைய காப்பி பண்ணி இருக்கிறேன். அவளை நான் இதுவரை மறக்க முடியாமல்தான் தவிக்கிறேன். அது நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போதும் யோசிப்பேன். அது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம்தான். இவ்வாறு சிம்ரன் கூறினார்.

The post பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்களுக்கு 5 ஆண்டு தடை: தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : South Indian Actors Association ,Chennai ,Visa Committee ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது