×
Saravana Stores

காஞ்சி பெரியவர் சொன்னது போல சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் : நித்யானந்தா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை : நித்யானந்தா சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், பஞ்சநதிகுளம் ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக மடம், திருவாரூர் ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம் ஆகிய பல மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை ஏற்கனவே இருந்த மடாதிபதி ஆத்மானந்தா நியமித்திருந்தார். ஆனால் நித்யானந்தா ஆள் பலம், பண பலம் மூலம் மடங்களை கைப்பற்ற முயற்சிப்பதால், சம்பந்தப்பட்ட மடங்களுக்கு தக்காரை நியமிக்க கோரி கோவையைச் சேர்ந்த பேச்சியப்பன், சின்னப்பன் ஆகியோர் அறநிலையத் துறை ஆணையருக்கு மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி பெண் சீடருக்கு பொது அதிகாரம் வழங்கி நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2017ல் தொடர்ந்த இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மடங்களுக்கு தக்கார்களை நியமிக்க அறநிலைத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட மடங்களுக்கு தக்கார்கள் கடந்த 2020 ம் ஆண்டேநியமிக்கப்பட்டு விட்டது. எனவே நித்தியானந்தா மனு விசாரணைக் உகந்தது அல்ல,”இவ்வாறு தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த
உத்தரவில் தலையிட முடியாது. வழக்கை தொடர உமாதேவி என்ற சீடருக்கு பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்துள்ளார். உண்மையிலேயே பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்தாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே, நித்யானந்தா நேரில் ஆஜராகி பவர் ஆப் அட்டார்னி கொடுத்தது உண்மைதான் என தெரிவிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு, நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்று தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,”நித்யானந்தா எங்கு உள்ளார்? நேரிலோ, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமோ ஆஜராகலாமே. நித்யானந்தாவை நேரில் பார்க்கவேண்டும், நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகலாம். எந்த மூலையில் இருந்தாலும் காணொலியில் நித்யானந்தா ஆஜராகலாம்,”எனத் தெரிவித்தனர். ஆனால் நித்யானந்தா காணொளி மூலம் ஆஜராக இயலாது என மனுதாரர் தெரிவித்ததால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், “நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை. நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. ஆனால் காஞ்சி பெரியவர் சொன்னது போல சன்னியாசி, சன்னியாசி போல இருக்க வேண்டும்,”என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

The post காஞ்சி பெரியவர் சொன்னது போல சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் : நித்யானந்தா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Sannyasi ,Kanji ,Supreme Court ,Nithyananda ,Chennai ,Chennai High Court ,Thiruvarur ,Sri Somanatha Swami Monastery ,Vedaranyam Sri Bo. Ex. Sadhuk Monastery ,Panchnadikulam Sri Arunachala Gnanadesiga Monastery ,Thiruvarur Sri Balsami ,Sankarasami ,
× RELATED வருமானத்திற்கு அதிகமாக சொத்து...