×
Saravana Stores

கொல்லிமலையில் மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்: இரவு பயணத்தை தவிர்க்க அறிவுரை


சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பெய்த தொடர் மழை காரணமாக, அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்ந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலைக்கு தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வழிப்பாதைகள், ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சந்தனப்பாறை அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர் மழையின் காரணமாக, கொல்லிமலையில் ஜில்லென்று குளிர் காற்று வீசுகிறது. இதமான காலநிலை நிலவி வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அருவியில் வரும் மழை நீரில் மரக்கிளைகள், சிறிய கற்கள் அடித்து வரப்படுவதால் பாதுகாப்பாக அருவியின் நடுப்பகுதியில் சென்று குளிக்காமல், ஓரமாக நின்று குளித்து விட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கொல்லிமலையில் மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்: இரவு பயணத்தை தவிர்க்க அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Kollimamalai ,SENTHAMANGALAM ,KOLLIMALA ,Namakkal district ,Kollimalai ,
× RELATED பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தீவிரம்