×
Saravana Stores

ஒரு மாதத்திற்கு பிறகு ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம்: நிலச்சரிவு காரணமாக ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது.மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மண் சரிந்து தண்டவாளம் சேதமடைந்தது. தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையாலும் அன்றைய தினம் முதல் நேற்று முன்தினம் (ஆக.31) வரை மலை ரயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இடையில் ஓரிரு தினங்கள் மட்டுமே ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த 180 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணியளவில் புறப்பட்டு சென்றது. நிலச்சரிவு, நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஒரு மாதத்திற்கு பிறகு ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty Hill ,Mettupalayam ,Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED சிறுமுகை அருகே ஒற்றை காட்டு யானை உலா : பொதுமக்கள் பீதி