வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 19ம் தேதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘என்னை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். ஆனால், அவர் இன்ஸ்டாகிராமில் தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை தட்டி கேட்டபோது, என்னுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் போட்டோ உள்ளது.
அதனை, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார்’ என தெரிவித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து 10 நாட்களுக்கும் மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லையாம். இதனால், மனவேதனையடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டனர். இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் அலுவலக சமூகநல பாதுகாப்பு துறையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து, எல்லப்பன்பட்டி கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் விவகாரத்திலும் வேப்பங்குப்பம் போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லையாம். இதனால் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், தொடர் புகார்களுக்கு ஆளான வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
The post பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை முயற்சி புகாரை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கள் மாற்றம் appeared first on Dinakaran.