வேலூர்: வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்தால் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. விற்பனையும் களைக்கட்டியது. வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
அதிகாலை 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்களின் வரத்து கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது. இருப்பினும் மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதனால் விற்பனை களைக்கட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வேலூர் மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் 6 லோடுகள் மீன்கள் வந்தது. இந்த வாரம் 5 லோடுகள் வந்துள்ளது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை ஒரு சில மீன்கள் சிறிய அளவில் அதிகரித்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1300 முதல் கிலோ ரூ.650 வரையும், இறால் கிலோ ரூ.350 முதல் 550 வரையும், நண்டு கிலோ ரூ.350, சங்கரா கிலோ ரூ.250 வரையும், ஷீலா கிலோ ரூ.350 வரையும், விரால் ரூ.500, கடல் வவ்வால் கிலோ ரூ.600 வரையும், பாறை ரூ.450, கலங்கா ரூ.160, வெல்ல கொடுவா ரூ.400 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விற்பனை களைக்கட்டியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்து குறைவு அசைவ பிரியர்கள் குவிந்ததால் களைக்கட்டிய விற்பனை appeared first on Dinakaran.