சென்னை: கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலம் ஏற்படுத்திய பாதிப்பால் பள்ளி செல்லும் சிறார் பலர் குழந்தை தொழிலாளர்களாக மாறிய சோகம் அரங்கேறியுள்ளது. இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் குழந்தை தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசால் மீட்கப்பட்டு இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கான குழந்தைகள் தொழிலாளர்களாகவே தவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு பின், பள்ளி செல்லும் சிறுவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு 24 மாவட்டங்களை சேர்ந்த 818 சிறுவர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.இந்த ஆய்வின் மூலம் இடைநிற்றல், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதும், விழிப்புணர்வின்மையுமே குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகாரிக்க முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் கருத்து தெரிவித்த குழந்தைகளில் 38% பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பள்ளி மாணவர்களில் 61.8% பேரில் 5.3% மட்டுமே இணைய வகுப்புகளில் சிரமமின்றி பங்கேற்றனர். ஸ்மார்ட் போன், இணையவசதியின்மை காரணமாக பெரும்பாலானோரால் இணைய வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையே உள்ளது. குழந்தை தொழிலாளர்களில் 8.3% தினசரி 8 மணி நேரம் பணியில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர். பணித்தளங்களில் 14.7% குழந்தைகள் பல்வேறு தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றனர். 6.9% பேர் மனரீதியாகவும், 3.8% பேர் உடல் ரீதியாகவும், 3.0% பேர் கடும் சொற்களாலும், 0.3% பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். ஊரடங்கிற்கு பின் இடைநிற்றல் காரணமாக 34.4% குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதும் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் பள்ளிகளில் வருகைபதிவேட்டை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார் சமகிராஸ்சிக்க்ஷா மாநிலதிட்ட சுதன்.தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் இடைநின்ற சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடிப்படை உரிமையான கல்வி கற்பதிலிருந்து விலகி குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றும் நிலையை முழுவதுமாக ஒழிக்க கட்டாய கல்விக்கான வயது வரம்பை 18 ஆக உயர்த்த வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள். …
The post கொரோனா பெருந்தொற்றால் அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்: கட்டாய கல்விக்கான வயதை 18 ஆக உயர்த்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.
