×
Saravana Stores

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்: திருச்சியில் 5ம் தேதி நடக்கிறது

சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர வலியுறுத்தி திருச்சியில் வருகிற 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அருகில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.6.55 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச்சுவர் கட்டப்பட்டதால் மிகப்பெரிய தவறு நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. ஆகவே, இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்டதில் நடந்த தவறு குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தியும்;

கம்பசரம்பேட்டை அருகில் தடுப்பணை கட்டிக்கொடுத்ததுபோல, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்ற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கட்டித்தர வலியுறுத்தியும் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டம் சார்பில் வருகிற 5ம் தேதி (வியாழன்) காலை 10.35 மணியளவில், `கொள்ளிடம் பாலம் அருகில், நம்பர் 1 டோல்கேட்’ என்ற இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்குவார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ப.குமார் முன்னிலை வகிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்: திருச்சியில் 5ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kollidam river ,Trichy ,Chennai ,Edappadi Palaniswami ,General Secretary ,Napier ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...