- யுஎஸ் ஓபன்
- ஜோகோவிக்
- நியூயார்க்
- நோவாக் ஜோகோவிக்
- அமெரிக்க ஓப்பன் கிராண்ட் ஸ்லாம்
- ஆஸ்திரேலியா
- அலெக்ஸி பாப்ரின்
- தின மலர்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரினுடன் (25 வயது, 28வது ரேங்க்) மோதிய செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் (37 வயது, 2வது ரேங்க்) 4-6, 4-6 என முதல் 2 செட்களையும் இழந்து பின்தங்கினார். 3வது சுற்றில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாபிரினை திணறடித்த ஜோகோவிச் 6-2 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
4வது செட்டிலும் அதே வேகத்துடன் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அலெக்சி பாபிரின் 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 19 நிமிடத்துக்கு நீடித்தது. 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று மகத்தான சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 3வது சுற்றுடன் வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜோகோவிச் தோல்வியை அடுத்து, கடந்த 22 ஆண்டுகளில் பெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரில் ஒருவர் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கூட வெல்லாத முதல் சீசனாக இது அமைந்துள்ளது. யுஎஸ் ஓபனில் 18 முறை விளையாடியுள்ள ஜோகோவிச் 5வது முறையாக காலிறுதிக்கு முன்னேறத் தவறியுள்ளார். அதே சமயம், பாபிரின் முதல் முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அதில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோ சவாலை சந்திக்கிறார்.
3வது சுற்றில் சக அமெரிக்க வீரர் பென் ஷெல்டனுடன் மோதிய பிரான்சிஸ் டியபோ 4-6, 7-5, 6-7 (5-7), 6-4, 6-3 என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்றார். இப்போட்டி 4 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), பிராண்டன் நகாஷிமா, டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ருமேனியாவின் எலனா கேப்ரியலா ரூஸ் உடன் மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் பவுலா படோசா 4-6, 6-1, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் 2 மணி, 32 நிமிடம் போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியன் கோகோ காஃப் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்), எம்மா நவர்ரோ (அமெரிக்கா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டோனா வேகிச் (குரோஷியா), யபான் வாங், கின்வென் ஸெங் (சீனா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.