சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக பிரதமர் மோடி அலுவலகத்தில் அதிகார குவியல் ஏற்பட்டு ஜனநாயக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாமஸ் பிக்கெட்டி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது. சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் சரிந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் 29 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளிலும் ஒரு கோடீஸ்வரரை மோடி ஆட்சி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 2023ல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அது நடப்பாண்டில் 334 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.159 லட்சம் கோடியாக உயர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 50 சதவிகிதமாக உயர்ந்திருப்பதன் மூலம் மோடி ஆட்சி யாருக்காக நடக்கிறது? என்பது தெளிவாகிறது. எனவே, மோடி ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது. எனவே, மோடி ஆட்சி என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடத்தை உரிய நேரத்தில் நிச்சயம் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் கோடீஸ்வரர்களுக்காக மோடி ஆட்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.