- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- வேலூர்
- தமிழ்நாடு வேளாண் சுற்றுலா கூட்டமைப்பு
- கேவி
- குப்பம் ஊராட்சி ஒன்றியம்
- களம்பட்டு அறிவுத் தோட்டம்
வேலூர், ஆக.31: விவசாய பாரம்பரியத்தை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க வேளாண் சுற்றுலா திட்டம் உதவும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார். தமிழ்நாடு வேளாண் சுற்றுலா கூட்டமைப்பு சார்பில் வேளாண் சுற்றுலா அறிமுக கூட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் காளாம்பட்டு அறிவுத்தோட்டத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி வேளாண் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: வேளாண் சுற்றுலா விவசாயிகளின் வருமானத்தை கூட்டவும், விவசாய பாரம்பரியத்தை மக்களிடமும் மற்றும் மாணவர்களிடமும் கொண்டு செல்லும் முயற்சி. இயற்கை விவசாயத்தினை பிரபலப்படுத்தவும் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் வேளாண் சுற்றுலா வழிவகுக்கும். தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உதவியுடன் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் விவசாய பண்ணைகள், நீர்நிலைகளை பார்வையிடவும் பயிற்சி தரவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுத்தோட்டத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து வந்து இங்குள்ள மரம், செடி போன்றவற்றின் வரலாறுகளை விரிவாக எடுத்துரைத்தும் மற்றும் இயற்கை விவசாய முறையின் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ள செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், தமிழ்நாடு வேளாண் சுற்றுலா கூட்டமைப்பு தலைவர் இறையழகன், செயலாளர் அருள்ஜேம்ஸ் எட்வின்தம்பு, பொருளாளர் நவீன் கிருஷ்ணன், சென்னை மண்டல வேளாண் சுற்றுலா திட்ட செயலாளர் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post விவசாய பாரம்பரியத்தை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க உதவும் கலெக்டர் சுப்புலட்சுமி பேச்சு வேளாண் சுற்றுலா திட்டம் appeared first on Dinakaran.